வங்கிகளில் பெற்ற ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடனை திருப்பிச் செலுத்தாமல், பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா லண்டனுக்கு சென்று விட்டார். அவர் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது பற்றி அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கின் அடிப்படையில், மராட்டிய மாநிலம் ரெய்காட் மாவட்டம் அலிபாக் என்ற இடத்தில் கடற்கரை ஓரத்தில் உள்ள பண்ணை வீட்டை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தற்காலிகமாக முடக்கி வைத்தது. 17 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வீடு, விஜய் மல்லையா கட்டுப்பாட்டில் இருந்த ஒரு நிறுவனத்துக்கு சொந்தமானது ஆகும்.
தற்காலிக முடக்கத்தை எதிர்த்து அந்த நிறுவனம் தொடர்ந்த மனுவை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் சமீபத்தில் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, பண்ணை வீட்டை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. வீட்டின் சுவரில் இதற்கான நோட்டீசை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று ஒட்டினர்.
பத்திரப்பதிவில் ரூ.25 கோடி மதிப்பு என காட்டப்பட்ட இந்த வீட்டின் சந்தை மதிப்பு ரூ.100 கோடி ஆகும்.