ஏமன் நாட்டில் காலராவுக்கு 209 பேர் பலி : 17 ஆயிரம் பேருக்கு பாதிப்பு

ஏமன் நாட்டில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதனால் அந்த நாட்டில் நிர்வாகம் சீர்குலைந்த நிலையில் உள்ளது.

எனவே, சுகாதாரம் உள்ளிட்ட முக்கிய பணிகளில் கூட அரசால் போதிய கவனம் செலுத்த முடியவில்லை. இதனால் மக்கள் நோய் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஏமனில் பல இடங்களில் காலரா நோய் பரவி இருக்கிறது. இதற்கு கடந்த சில நாட்களில் மட்டும் 209 பேர் பலியாகி இருக்கிறார்கள். 17 ஆயிரத்து 200 பேர் காலராவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காலராவுக்கு உயிர் இழந்தவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் ஆவர். தினமும் புதிதாக 3 ஆயிரம் பேரை காலாரா நோய் தாக்குவதாக ஏமன் அரசு செய்தி தொடர்பாளர் கூறி இருக்கிறார்.

கிருமிகளால் பாதிக்கப்பட்ட உணவு மற்றும் குடிநீரால்தான் காலரா நோய் பரவி வருவதாக தெரிய வந்துள்ளது.