வடகொரியா அத்துமீறல்: போருக்கு தயாராகுங்கள் என தென்கொரிய வீரர்களுக்கு அதிபர் கட்டளை!

வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. தென் கொரியாவை மிரட்டும் வகையில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை, அணுகுண்டு சோதனை போன்றவற்றை நடத்தி வருகிறது. தென் கொரியாவுக்கு அவ்வப்போது எச்சரிக்கை தகவல்களையும் அனுப்புகிறது.

இந்த நிலையில் தென் கொரியாவில் அதிபர் தேர்தல் நடந்து புதிய அதிபராக மூன் ஜா-இன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அதிபர் பதவிக்கு வந்ததும் வடகொரியாவுடன் மென்மையான போக்கை கடைபிடிக்க திட்டமிட்டார்.

இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்படுவதை விரும்பாத அவர், வட கொரியாவுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தவும் தயார் ஆனார்.

இது சம்பந்தமாக கருத்து வெளியிட்ட அவர், நான் வட கொரியாவுக்கு செல்ல தயாராக இருக்கிறேன். அந்த நாட்டு அதிபருடன் பேசுவதற்கும் நான் விரும்புகிறேன் என்றும் அவர் கூறி இருந்தார்.

ஆனால், அவரது பேச்சை வடகொரியா கண்டுகொள்ளவே இல்லை. மேலும் தொடர்ந்து எரிச்சலூட்டும் வகையில் வடகொரியா நடந்து கொள்கிறது. இதற்கிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய ஏவுகணை சோதனையையும் நடத்தி உள்ளது.

இரு நாட்டின் எல்லையில் வடகொரியா ராணுவம் அத்துமீறி நடந்து கொள்கிறது. இது, தென் கொரிய அதிபர் மூன் ஜா-இன்னுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று தென் கொரிய பாதுகாப்பு துறை அலுவலகத்துக்கு வந்த அதிபர் மூன் ஜா-இன் கூறியதாவது:-

வடகொரியா தொடர்ந்து நம்மை மிரட்டும் வகையில் நடந்து கொள்கிறது. அவர்கள் செய்யும் அட்டகாசத்தை தொடர்ந்து பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது.

அவர்களுடைய அணு குண்டு அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். எல்லை பகுதியில் அவர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே, நமது வீரர்கள் எந்த நிலையையும் சமாளிக்கும் நிலையில் போருக்கு தயாராக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.