இங்கிலாந்தில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் காயமடைந்துள்ள மணிஷ் பாண்டேவுக்கு பதிலாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார்.
மினி உலக கோப்பை என்று அழைக்கப்படும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஜூன்) 1-ந்தேதி முதல் 18-ந்தேதிவரை இங்கிலாந்தில் நடக்கிறது. இதில் ‘டாப்8’ நாடுகள் பங்கேற்கின்றன. ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
நடப்பு சாம்பியனான இந்திய அணி ‘பி’ பிரிவில் உள்ளது. பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளும் அந்த பிரிவில் இருக்கின்றன. சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான இந்திய அணி கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அதில், விராட் கோலை தலைமையிலான 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டது.
இந்த பட்டியலில் இடம் பெற்றிருந்த இளம் பேட்ஸ்மேன் மணிஷ் பாண்டே, நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிக்கான பயிற்சியின் போது காயமடைந்துள்ளார். காயம் குணமடையாததால் அவர் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
இதனால், அவர் வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாட முடியாது. இதையடுத்து, அவருக்கு பதிலாக தமிழகத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியிலும் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.