ஓய்வுபெற்ற ஆசிரியை அடித்துக் கொலை! தனிமையில் இருந்த வேளை பயங்கரம்

சிறுப்பிட்டி பகுதியில் உள்ள வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு திருடர்களால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

சிறுப்பிட்டி மத்தி சிறுப்பிட்டியை சேர்ந்த அத்தியார் இந்து கல்லூரியின் ஓய்வுபெற்ற விவசாய பாட ஆசிரியரான சுப்பிரமணியம் தேவிசரஸ்வதி (வயது 68) என்பவரே மேற்படி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருகையில்,
நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கும் அதிகாலை 2 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் வீட்டின் ஓடு வழியாக உள்நுழைந்த திருடர்கள் வீட்டில் தனித்திருந்த முன்னாள் ஆசிரியையின் தலையில் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த அவர் பரிதாபகரமாக உயிரிழக்க நேரிட்டது.

தொடர்ந்து கொள்ளையர்கள் வீட்டில் உள்ள அனைத்து பகுதியிலும் தேடுதல் மேற்கொண்டுள்ளனர். இதற்கு அடையாளமாக வீட்டில் உள்ள பொருட்கள் சிதறிய நிலையில் காணப்பட்டன. அத்துடன் கொல்லப்பட்டவர் இருந்த அறையிலும் பொருட்கள் தளபாடங்கள் ஆடைகள் என்பன சிதறி காணப்பட்டதுடன் தளபாடங்களில் இரத்த கறையும் காணப் பட்டது.

பிரஸ்தாப பெண்ணின் உறவினர்கள் அனைவரும் வெளிநாட்டில் வசித்து வருவதாகவும் இவர் அங்கு தனிமையில் வசித்து வந்துள்ளார் எனவும் முதற்கட்ட விசாரணையில் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்படி சம்பவத்தில் திருடர்களால் என்னென்ன பொருட்கள் களவாடப்பட்டுள்ளன என்பது தொடர்பான தகவல்கள் உறுதியாக தெரிவிக்கப்படாத நிலையில் கொலை தொடர் பிலான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.