போர்க்குற்ற விசாரணைக்கான கதவு காணாமல்போனவர்கள் தொடர்பான சட்டத் தின்மூலம் திறக்கப்படும் என்ற காரணத்தினால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அதனை அமுல்படுத்த தடையாக இருப்பதாக எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
எனினும் இந்த சட்டமூலத்தை அமுலுக்கு கொண்டுவர ஆதரவு வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமக்கு உறுதியளித்துள்ளதாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.முல்லைத்தீவில் நேற்று 71-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த் தேசிய கூட்டமை ப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நேற்று நேரடியாக சந்தித்துள்ளார்.
இறுதி யுத்தத்தின் போது தாயகப்பகுதியில் படுகொலைசெய்யப்பட்ட உறவுகளைகளை நினைவுகூரும்வகையில் முள்ளிவாய்க்காலில் ஏற்பாடுசெய்யப்பட்ட அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர், முல்லைத்தீவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து அவர்களின் துன்பங்களை எதிர்க் கட்சித் தலைவர் நேரடியாக கேட்டறிந்தார்.
இதன்போது எதிர்க்கட்சித் தலைவருடன் உரையாடிய மக்கள். இராணுவத்தினரிடம் நேரடியாக கையளித்த தமது பிள்ளைகளையே தாம் கேட்பதாகவும், தமது பரிதவிப்பை எதிர்க்கட்சித் தலைவரான நீங்கள் அரசாங்கத்திடம் எடுத்துரைக்க வேண்டும் எனவும் கண்ணீருடன் கோரிக்கை விடுத்திருந்தனர்.