கணேசன் என்ற விநாயகன் விக்னமெல்லாம் தீர்த்து வைப்பான். முழுமுதற்கடவுளான கணபதியை எந்த ஒரு செயலை துவங்கும் முன்னரும், உளமாற வழிபட்டு ஆரம்பித்தால், அந்தச் செயல், எந்தத் தடையுமின்றி, எளிதாக மன நிறைவாக முழுமை பெறும். அரக்கர்களையும் வதைக்க முற்பட்ட ஈசனே, அவ்வாறு சென்றபோது தான் சென்ற தேரின் அச்சு முறிந்துபோக, அதன்பிறகு கணபதியை வழிபட்டு தன் செயலில் வெற்றி கண்டார் என்கிறது புராணம்.
அத்தகைய சிறப்புப் பெற்ற கணேசனை கீழ்க்காணும் ஸ்லோகங்களைச் சொல்லி அவனருளைப் பெறுவோம்; கவலைகள் ஏதுமில்லாமல், களிப்போடு வாழ்வோம்:
யதோனந்த ஸக்தேரனந்தாஸ்ச ஜீவா
யதோ நிர்குணாதப்ரமேயா குணாஸ்தே
யதோ பாதி ஸர்வம் த்ரிதாபேதபின்னம்
ஸதா தம் கணேஸம் நமாமோ பஜாம:
அளவற்ற சக்தியுள்ள எம்பெருமானே, கணேசா, நமஸ்காரம். உன்னிடமிருந்துதான் அளவற்ற ஜீவர்கள் உண்டானார்கள். நிர்குணரான உன்னிடமிருந்துதான் அளவிற்கடங்காத குணங்கள் எல்லாம் உண்டாயின. உன் ஆற்றலால்தான் எல்லா உலகமும் முக்குணங்களாகப் பிரிவுகள் கொண்டு இயங்குகின்றன. இத்தகைய பெரு கீர்த்தி கொண்ட கணேசா நமஸ்காரம், எப்போதும் நமஸ்காரம்.
யதஸ்சாவிராஸீத் ஜகத் ஸர்வமேதத்
ததாப்ஜாஸனோ விஸ்வகோ விஸ்வகோப்தா
ததேந்த்ராதயோ தேவஸங்கா மனுஷ்யா:
ஸதா தம் கணேஸம் நமாமோ பஜாம:
கணேசா, உன்னிடமிருந்துதான் எல்லா உலகமுமே உண்டானது. அதனால் நீ எங்கும் அப்படியே வியாபித்திருக்கிறாய். ஜீவராசிகளைப் படைப்பதற்காக பிரம்மனும் இந்திரனும் தேவர்களும் மனிதர்களும் உன்னிடமிருந்தே உருவானவர்கள். அத்தகைய பராக்கிரமம் கொண்ட கணேசா, நமஸ்காரம்.