அரசாங்கத்தின் தகவல்களை மகிந்தவுக்கு வழங்கும் அமைச்சர்!

நீண்ட நாட்களாக இழுத்தடிக்கப்பட்டு வரும் அமைச்சரவை மாற்றத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாராகி வருவதாக அந்த கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில், விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, மின்வலுத்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, கனிய எண்ணெய் வளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி, நீர்பாசனம் மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா ஆகியோருககு பதவிகள் கிடைக்காமல் போகலாம் என கூறப்படுகிறது.

இந்த அமைச்சர்களில் ஒருவர் அமைச்சரவையில் இருந்து கொண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அரசாங்கத்தின் சகல தகவல்களையும் வழங்கி வருவதாக அரச புலனாய்வு சேவையும் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த அமைச்சர் தொடர்பாக ஜனாதிபதி கடும் வெறுப்பிலும் கோபத்திலும் இருப்பதாக சுதந்திரக் கட்சியின் தகவல்கள் கூறுகின்றன.

தமது பதவிகளில் திறம்பட செயற்பட முடியாத காரணத்தினால் ஏனைய அமைச்சர்கள் பதவிகளை இழக்க உள்ளதாக பேசப்படுகிறது.

இவர்களுக்கு பதிலாக எஸ்.பி. திஸாநாயக்க, சரத் அமுனுகம, டிலான் பெரேரா, திலங்க சுமதிபால ஆகியோர் நியமிக்கப்பட உள்ளனர்.

எவ்வாறாயினும் ஐக்கிய தேசிய கட்சியினர் வகித்து வரும் பதவிகளில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்த கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் மீது பிரதமர் கொண்டுள்ள நம்பிக்கை, கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர்கள் எடுத்துள்ள முன்னேற்றகரமான நடவடிக்கைகள் தொடர்பில் பிரதமர் திருப்தியடைந்துள்ளதால், பதவிகளில் மாற்றங்கள் ஏற்படாது எனவும் அந்த சிரேஷ்ட உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அரசாங்கத்தின் உடன்படிக்கைக்கு அமைய ஐக்கிய தேசியக் கட்சி வகிக்கும் அமைச்சுகள் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வகிக்கும் அமைச்சுக்கள் தொடர்பில் சுதந்திரக் கட்சியும் தீர்மானங்களை எடுக்க இடமளிக்கப்பட வேண்டும் என பிரதமர், ஜனாதிபதியிடம் திட்டவட்டமாக கூறியுள்ளதாக இதற்கு முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 23ம் திகதி அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் செல்ல உள்ளதுடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 28ம் திகதி அமெரிக்கா புறப்பட்டுச் செல்லவுள்ளார்.