10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று இரவு இறுதிப் போட்டிக்கான 2-வது தகுதி சுற்று ஆட்டம் பெங்களூரில் நடந்தது. இதில் கொல்கத்தாவை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. முதலில் விளையாடிய கொல்கத்தா அணி மும்பையின் அபார பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் திணறியது. அந்த அணி 18.5 ஓவரில் 107 ரன்னில் சுருண்டது. மும்பை தரப்பில் கரண்சர்மா 4 விக்கெட்டும், பும்ரா 3 விக்கெட்டும் எடுத்தனர்.
அடுத்து விளையாடிய மும்பை 14.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
2 முறை சாம்பியனான மும்பை ஐ.பி.எல். இறுதிப் போட்டிக்கு 4-வது முறையாக தகுதி பெற்று உள்ளது. வெற்றி குறித்து மும்பை கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-
நாங்கள் கடினமாக உழைத்தோம். இந்த நாள் (நேற்று) சரியாக அமைந்தது. பந்து வீச்சாளர்கள் எங்களுக்குரிய நாளாக அமைத்து கொடுத்தனர். இது மிகுந்த நம்பிக்கையை கொடுத்து உள்ளது.
தொடர்ந்து விக்கெட்டுகளை கைப்பற்றியதால் ரன்களை கட்டுப்படுத்த முடிந்தது. அதுதான் எங்கள் அணியின் தனித்தன்மை. ஒருவரை மட்டும் நம்பி அணி இல்லை, ஒட்டுமொத்த அணியின் உத்வேகத்தை காட்டுகிறோம்.
இறுதிப்போட்டியில் விளையாட நாங்கள் தகுதியான அணி. இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம்.
இறுதிப்போட்டியில் புனேயுடன் மோத உள்ளோம். அந்த அணிக்கு எதிராக சிறந்த வரலாறு எங்களுக்கு இல்லை. அதற்கு ஒரு ஆட்டம் (இறுதிப்போட்டி) தடையாக இருக்கிறது என்றார்.
இந்த தொடரில் புனே- மும்பை அணிகள் இதுவரை 3 முறை மோதி உள்ளன. மூன்றிலும் புனேவே வெற்றி பெற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.