சென்னை மெரினாவில் நினைவேந்தல் நடத்த மே17 இயக்கத்திற்கு தடை

மெரினா கடற்கரையில் சட்டவிரோதமாக கூடுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.

சென்னை மாநகர காவல் சட்டவிதி 41 அமலில் உள்ள நிலையில், மெரினா கடற்கரையில் விதிமுறையை மீறி கூட்டங்கள் நடத்தவோ போராட்டம் நடத்தவோ முற்படுவது சட்டவிரோதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு அவர்களின் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், சென்னை காவல்துறை தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மே 17 இயக்கம் சார்பில், இலங்கை இனப்படுகொலை அஞ்சலி கூட்டத்திற்கு நாளை ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், காவல்துறை இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே, திட்டமிட்டபடி மெரினாவில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறும் என, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் கூறியுள்ளார்.

மெரினாவில் நினைவேந்தல் கூட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து, ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது மெரினா நினைவேந்தல் கூட்டத்திற்கு அனுமதி வழங்கியது போல், இந்த முறையும் காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச் செயலாளர் ஜெ.தீபா வலியுறுத்தியுள்ளார்.