சிங்கள அரசை கூண்டில் ஏற்றி தண்டிக்க வேண்டும்! ஜெயலலிதாவின் உறுதி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளை உற்றுநோக்கியிருந்ததோடு, அதன் செயற்பாடுகளில் நம்பிக்கை கொண்டிருந்தார் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இடம்பெற்று வருகின்ற நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வுக்கு அனுப்பி வைத்திருந்த வாழ்த்துச் செய்தியிலேயே ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் மீது திட்டமிட்டு இனப்படுகொலை செய்ய சிங்கள அரசினை கூண்டிலேற்றி தண்டிக்க வேண்டும் என செல்வி ஜெயலலிதா அவர்கள் உறுதியாக இருந்ததாக தெரிவித்துள்ள ஓ.பன்னீர்செல்வம், ஈழத்தமிழ் மக்களின் உரிமைகளுக்காக வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்களை தமிழக சட்டசபையில் நிறைவேற்றிருந்தர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவும், தமிழகத்தில் தஞ்சம் புகுந்து வாழ்ந்து வரும் ஈழத்தமிழ் அகதிகளின் நல்வாழ்வுக்கு அ.தி.மு.க -புரட்சி தலைவி அம்மா) அணி உறுதியுடன் செயற்படும் எனத் தெரிவித்துள்ள ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மே 18 தமிழீழத் தேசிய துக்க நாளின் முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரையினைத் தொடர்ந்து, மே 19ம் நாளன்று தொடங்கிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவையின் ஏழாவது நேரடி அமர்வு எதிர்வரும் 21ம் நாள் வரை இடம்பெறுகின்றது.