மெரினா கடற்கரை பகுதியில் ஈழப் படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்திட சென்னை மாநகர் காவல் துறையினர் அனுமதி அளிக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர்.அம்மா தீபா பேரவையின் பொதுச் செயலாளர் ஜெ.தீபா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2009 ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் சிங்கள அரசு லட்சக்கணக்கானத் தமிழர்களை குறிப்பாக குழந்தைகள், கர்ப்பணிப் பெண்கள் உள்பட வயது வித்தியாசம் இல்லாமல் கண்முடித்தனமாக இராணுவத்தை அப்பாவியான அவர்கள் மீது ஏவி உலகம் முழுவதும் தடை செய்த குண்டுகளை குறிப்பாக கனரக பீரங்கி குண்டுகளை வீசி இனப்படுகொலை சிங்கள அரசு செய்தது.
ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் கற்பு சூறையாடப்பட்டு கொல்லப்பட்டனர்.
இனப்படு கொலைக்கு அன்றைக்கு இந்திய நடுவண் அரசு காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியையும், தமிழகத்தில் ஆட்சி செய்த திமுகவும் துணைபோனது, மறைந்த ஜெயலலிதா இனப்படுகொலையைக் கண்டித்து அறிக்கை விடுத்ததோடு, ராஜபக்சேவை யுத்த குற்றவாளி என அறிவித்து தண்டிக்கப்பட வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பெருமை அவர்களுக்கு உண்டு.
இனப்படுகொலையை எதிர்த்தும் அப்போரில் இறந்தவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி ஆண்டு தோறும் தமிழ் உணர்வாளர்கள் சென்னை மெரினாவில் நடத்தி வருகிறார்கள்.
தற்போது அந்த நினைவேந்தல் புகழ் அஞ்சலி வீரவணக்கம் நிகழ்ச்சிக்கு சென்னை மாநகர காவல்துறை அனுமதி அளிக்காமல் உள்ளது.
மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்த போது இந்நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியது போல தொடர்ந்து அனுமதி அளித்திட சென்னை மாநகர் காவல் துறையினருக்கு தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.
இதேவேளை, சென்னை கடற்கரையில் சட்டவிரோதமாக கூடினால் கைது செய்யப்படுவார்கள். கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.
ஈழப் படுகொலை நினைவேந்தலுக்கு அனுமதி கோரி தீபா விண்ணப்பித்துள்ள நிலையில் இந்த தடை உத்தரவை காவல்துறை பிறப்பித்துள்ளது.