எங்களை ஆள வேண்டும் என ரஜினி நினைக்கக் கூடாது… சீமான்!

ரஜினி தாராளமாக அரசியலுக்கு வரலாம். அவர் மக்கள் தலைவராகட்டும். ஆனால் எங்களை ஆள வேண்டும் என்று அவர் நினைக்கக் கூடாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சீமான் ஒரு போராளி. அவரது பேச்சைக் கேட்டு நான் பலமுறை திகைத்துப் போயுள்ளேன் என்று ரஜினி கூறியிருந்தார். ரஜினியின் பாராட்டு குறித்து உடனடியாக பதிலளித்திருந்தார் சீமான்.

இந்த நிலையில் நெல்லையில் நடந்த கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் இந்த பேச்சு குறித்து மீண்டும் கருத்து தெரிவித்தார் சீமான்.

அந்தப் பேச்சிலிருந்து,

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதில் தவறில்லை. அவர் எளிமையானவர். என்னை அவர் போராளி என கூறியதன் மூலம் எனக்கு இன்னும் பொறுப்புகள் உள்ளன என்பதை உணர்கிறேன்.

எனது அரசியல் பயணத்தில் அதிக கவனம் எடுத்துச் செல்கிறேன். 40 ஆண்டுகள் ரஜினி இங்கே வாழ்ந்ததால் தன்னை தமிழராக நினைக்கிறார். அவரை நாங்கள் மதிக்கிறோம். அவர் படத்தை முதல் காட்சிக்கு சென்று பார்க்கிறோம்.

அவர் மக்கள் தலைவராக வேண்டும். தமிழகத்திற்கு தலைமை ஏற்று சேவை செய்யவேண்டும். ஆனால் அவர் தமிழகத்தை ஆளவேண்டும் என்று நினைக்கக்கூடாது.

அரசியலில் அளப்பரிய தியாகம் செய்யவேண்டும். ஆனால் எங்களை ஆளவேண்டும் என அவர் நினைப்பது சரியாக இருக்காது. இதை அவர்மீது அன்பு வைத்தவன் என்ற முறையில் சொல்லிக் கொள்கிறேன் என்றார் சீமான்.