ரசிகர்களை பல வருடங்களுக்குப் பிறகு சந்தித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், ரசிகர் மன்றத்தினரை முழுமையாக சந்தித்த பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
நடிகர் ரஜினிகாந்த் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரசிகர்களைச் சந்தித்துள்ளார். முதல் கட்டமாக சில மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்துள்ளார். ரசிகர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டுள்ளார். அடுத்து மீதமுள்ள மாவட்டத்தினரையும் சந்திக்கவுள்ளார்.
இந்த சந்திப்பின்போது ரசிகர் மன்றத்தினருடன் விரிவாக பேசியுள்ளார் ரஜினி. அவர்களிடம் மனம் விட்டுப் பேசியுள்ளார். அவர்கள் சொன்ன கருத்துக்களையும் கவனத்துடன் உள்வாங்கிக் கொண்டாராம்.
ரசிகர்கள் சந்திப்பின்போது அவர்கள் சொன்ன பல விஷயங்களையும் கவனமாக கேட்டுக் கொண்ட ரஜினி. தானும் அவர்களுக்கு பல யோசனைகளையும், சில வேலைகளையும் கூறியுள்ளாராம்.
தமிழகம் குறித்த டேட்டா பேஸ் அதில் ஒன்று. அதாவது தமிழகத்தின் அரசியல், பொருளாதாரா, சமூக சூழல் குறித்த பல விவரங்களை தொகுத்துத் தருமாறு ரசிகர்களிடம் கேட்டுள்ளார் ரஜினி என்று கூறுகிறார்கள்.
தமிழகத்தின் தலையாய பிரச்சினைகள் என்ன என்பது அதில் முக்கியமான ஒன்று சொல்கிறார்கள். பிரச்சினைகள் குறித்த பட்டியல். அதற்கான தீர்வுகள், அதற்கு செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து லிஸ்ட் கேட்டுள்ளாராம்.
இந்த பட்டியல் கைக்குக் கிடைத்தவுடன், தமிழகத்தின் தேவைகள் குறித்த கோரிக்கை மனுவுடன் பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்திக்கலாம் என்று சொல்கிறார்கள்.
ஒரு வேளை கோரிக்கை மனுவுடன் ரஜினி பிரதமரைச் சந்தித்தால், அந்தக் கோரிக்கைகளை மத்திய பாஜக அரசு உடனடியாக நிறைவேற்றுமா இல்லையா என்பதைப் பொறுத்து ரஜினியின் அரசியல் பிரவேசம் அமையலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.