பளை- கச்சார்வெளியில் சிறிலங்கா காவல்துறை வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை தொடர்பாக முக்கியமான பல துப்புக்கள் கிடைத்துள்ளதாகவும், இதன் மூலம் சம்பந்தப்பட்டவர்களை விரைவில் கைது செய்ய முடியும் என்றும் சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
வடக்கு மாகாணத்துக்கான பதில் மூத்த பிரதிக் காவல்துறை மா அதிபர் சுமித் எதிரிசிங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
“கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பாக நேற்றும் அந்தப் பகுதியில் தேடுதல்கள் நடத்தப்பட்டன.
தாக்குதல் நடத்தியவர்களால் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு சோடி கையுறைகள் உள்ளிட்ட பல தடயப் பொருட்கள் இந்த தேடுதலின் போது கிடைத்துள்ளன.
தாக்குதல் நடப்பதற்கு முன்னதாக அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் காணப்பட்ட வாகனம் ஒன்றின் இலக்கமும் அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான முக்கியமான பல துப்புக்கள் கிடைத்துள்ளதால், சம்பந்தப்பட்டவர்களை விரைவில் கைது செய்ய முடியும்“ என்று தெரிவித்துள்ளார்.