சிங்களவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு, சிங்களவர்களின் ஒற்றுமையை முழு நாட்டுக்கும் தெரியப்படுத்த வேண்டும், உடனடியாக சிங்களவர்கள் அனைவரும் ஒன்று திரளுங்கள் என அவரச அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கோரிக்கையை இன்று காலை முதல் பொதுபல சேனாவினர் சமூக வலைத்தளங்கள் ஊடாகவும், காணொளிகள் மூலமாகவும் வேகமாக பரப்பி வருகின்றனர்.
மேலும் அவர்கள் விடுத்துள்ள காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நேற்றைய தினம் பொதுபலசேனாவின் ஞானசார தேரரை கைது செய்ய பொலிஸார் வந்ததோடு, குருநாகல் பகுதியில் பதற்றத்தையும் ஏற்படுத்தினர். எனினும் பிக்குகளும், சிங்கள இளைஞர்களும் ஒன்று திரண்டு ஞானசார தேரரை காப்பாற்றினோம்.
எனினும் ஞானசார தேரரின் உயிருக்கே தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சிங்களவர்கள் அனைவரையும் ஒன்று திரள வேண்டும் என கோரிக்கை விடுத்தோம்.
அதன் காரணமாக கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் தற்போது ஏராளமான சிங்கள இளைஞர்களும், பிக்குகளும் ஒன்று கூடியுள்ளனர்.
எனினும் நாட்டில் அனைத்து பாகங்களில் உள்ளவர்களையும் உடனடியாக தலதா மாளிகைக்கு முன்னே, ஒன்று கூட வேண்டும். முதலாவதாக மாத்தளை, குருநாகல், தம்புள்ளை என அருகில் உள்ள சிங்களவர்கள் இங்கு வருகைதர வேண்டும்.
ஞானசார தேரர் மட்டுமே எமக்காக இருக்கின்றார் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டு விட்டது அவரைக் காப்பாற்ற வேண்டும், அத்தோடு இது சிங்கள நாடு அதனை புரிய வைக்க வேண்டும்.
அதனால் இன்று மாலைக்குள் கண்டி தலதா மாளிகையின் முன்னால் அனைவரும் ஒன்றிணைந்து எமது பலத்தை முழு நாட்டுக்கும் காட்டவேண்டும்.
இந்தக் காணொளியை பார்ப்பவர்கள் உடனடியாக பகிருங்கள், அனைவருக்கும் தற்போது உள்ள நிலைமையை தெரிவியுங்கள். எந்த அமைப்பினராக இருந்தாலும் பரவாயில்லை.
பாரபட்சம் பார்க்காது பௌத்தத்தையும், ஞானசார தேரரையும் காப்பாற்ற உடனடியாக வாருங்கள். இராவண பலய, சிங்கலே போன்ற அமைப்புக்கும் இதனைப்பற்றி தெரிவித்துள்ளோம்.
அவர்களும் கூடிய விரைவில் இங்கே வருகைத் தரவுள்ளனர். எனவே முடிந்தளவு விரைவாக அனைவரும் ஒன்று திரண்டு வாருங்கள் எனவும் குறித்த காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதெவேளை நேற்றைய தினம், குருநாகல் பகுதியில் பொதுபல சேனாவினரால் பதற்ற நிலை ஏற்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று கண்டியில் அவசரமான ஒன்று கூடல் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அங்கு பதற்ற நிலை ஏற்படுமா எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.