எமது தமிழ் சமூகத்தை மீண்டும் அநாதையாக்கும் நோக்கில் போதைப்பொருள் பாவனையை அதிகரிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் திட்டமிட்டு செயற்படுத்துகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று(20) இடம்பெற்ற போதைக்கு எதிரான பேரணியில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் திறக்கப்பட்ட, திறக்கப்பட இருக்கின்ற அனைத்து மதுபானசாலை உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்களை தனியார் திறக்கவில்லை. தனியாருக்கு அனுமதியை நேரடியாக வழங்குவது அரசாங்கமே.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொண்டுவரப்பட்ட மதுபான விற்பனை நிலையங்களை நிறுத்துவதற்கோ அல்லது மூடுவதற்கோ, பிரதேச செயலாளர், மாவட்ட அரச அதிபர், மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை.
முற்றுமுழுதாக தமிழர் தாயக பூமியில் மதுபானசாலைகளை அமைக்க திட்டமிட்டுக்கொண்டிருப்பது மத்திய அரசாங்கம். அரசாங்கம் இந்த விடயத்தில் தன்னை முழு அளவில் திருத்திக்கொள்ள வேண்டும்.
விடுதலைப் புலிகள் போராட்டக் காலத்தில் தாயகப் பூமியிலுள்ள மண் வளம் பாதுகாக்கப்பட்டது. ஆனால் தற்போது கொழும்பில் உள்ளவர்கள் தான், மட்டக்களப்பு மாவட்ட மண் வளத்தையும் எமது வளத்தையும் சுரண்டி கோடீஸ்வரர் ஆகின்றார்கள்.
யுத்தம் மற்றும் சுனாமி போன்ற பல்வேறுபட்ட அனர்த்தங்களுக்கு உள்ளான மட்டக்களப்பு மாவட்டத்தை கல்வி ரீதியாக பிரதேச செயலகம், மாவட்ட செயலகம், மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் சேர்ந்து எவ்வாறு முன்னேற்றுவது என்று சிந்திக்கின்ற வேளையில், மதுபோதையை விதைக்கும் நல்லாட்சி அரசின் இந்த செயற்பாட்டை எம்மால் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
மத்திய அரசு, மாகாணம், மாவட்டம், பிரதேச செயலகம் போன்றவற்றின் கீழ் செய்கின்ற பல்வேறுபட்ட செயற்திட்டங்களை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பிரதிநிதிகளாகிய நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
நல்லாட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டது போன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு மதுபான விற்பனை நிலையம் கூட திறக்கப்படாது என கனவுகண்டோம்.
ஆனால் நல்லாட்சி ஆட்சிக்கு வந்த 4 மாதத்தில் மட்டக்களப்பு கல்குடா கும்புறுமூலைப் பகுதியில் 19 ஏக்கர் நிலப்பரப்பில், 450 கோடி ரூபாய் செலவில் ஒரு மதுபானசாலை உற்பத்தி தொழில்சாலை கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கியதேசிய கட்சியின் ஆதரவில் குறித்த மதுபான உற்பத்திசாலை கட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
மக்கள் போராட்டம், மாவட்ட அபிவிருத்திக் குழு அமர்வுகளில் குறித்த மதுபானசாலை உற்பத்தி நிலையத்தை மூடுமாறு அழுத்தம் கொடுத்தும், அரசு வாய்மூடி கைகட்டிக் கொண்டிருக்கின்றது.
அத்துடன், மத்திய அரசு அதற்கான ஆதரவை வழங்கிக்கொண்டிருப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம். குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கம் முடிவை வழங்கவேண்டுமென எதிர்பார்த்து இருக்கின்றோம்.
மட்டக்களப்பில் இருக்கின்ற புத்திஜீவிகள் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருப்பவர்கள் தெளிவாக ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்.
இந்த மாவட்டத்தில் மதுபான உற்பத்தி தொழில்சாலையினால் கிடைக்கும் வேலைவாய்ப்பு எமது மக்களுக்குத் தேவையில்லை.
கல்குடா மதுபான உற்பத்தி நிலையத்தினால் முழு இலங்கைக்கும் மதுபானம் வழங்கும் நிலையமாக மாறப்போகின்றது. குறித்த மதுபான உற்பத்தி தொழில்சாலை எமது மாவட்டத்திற்கு தேவையில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.