ஆஸ்திரேலியா நாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ள சுமார் 7500 அகதிகளை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு குடியுரிமை மந்திரி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா நாட்டில் இலங்கை, மியான்மர், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். முறையான காரணங்கள் இல்லாமல் சிலர் தங்கியிருப்பதாகவும், இவர்களால் அரசுக்கு பெரும் நிதிச்சுமை ஏற்படுவதாகவும் பல்வேறு கட்சியினர் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்நிலையில், அகதிகளாக பதிவு செய்வதற்கு போலியான காரணங்களை அளித்து சட்டவிரோதமாக அங்கு தங்கியிருக்கும் சுமார் 7500 பேரை நாட்டை விட்டு வெளியேற்ற முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டு குடியுரிமை மந்திரி பீட்டர் டட்டன் தெரிவித்துள்ளார்.
2013-ஆம் ஆண்டுக்கு முன்னர் ஐந்தாண்டு காலத்தில் வந்த சுமார் 50,000 பேரில், 20,000 பேருக்கு அப்போதைய தொழிலாளர் கட்சி அரசு புகலிடம் அளிக்க முடிவு செய்தது. மேலும் 30,000 பேரின் நிலை குறித்து ஐயம் எழுப்பியிருந்தது. இந்நிலையில், அவர்களில் சுமார் 7,500 பேர் முறையான காரணம் இல்லாமல் அகதிகள் அந்தஸ்து பெற முயல்வதாகத் தெரியவந்துள்ளதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்