இந்தியா, தென்ஆப்பிரிக்கா, அயர்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய 4 நாடுகள் இடையிலான பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் தென்ஆப்பிரிக்காவில் நடந்து வந்தது. இதில் தலா 5 வெற்றிகளுடன் முதல் இரு இடங்களை பிடித்த இந்தியாவும், தென்ஆப்பிரிக்காவும் இறுதிப்போட்டியில் நேற்று சந்தித்தன.
முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி இந்திய பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 40.2 ஓவர்களில் 156 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய தரப்பில் ஜூலன் கோஸ்வாமி, பூனம் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
தொடர்ந்து ஆடிய இந்திய அணி 33 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதோடு, சாம்பியன் கோப்பையையும் வசப்படுத்தியது. இந்திய கேப்டன் மிதாலி ராஜ் 62 ரன்களுடனும், பூனம் ரவுத் 70 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
கேப்டன் பதவியில் மிதாலிராஜிக்கு இது 100-வது ஆட்டமாகும். இந்த மைல்கல்லை எட்டிய 3-வது வீராங்கனை மிதாலி ராஜ் ஆவார். அதிக ஆட்டங்களுக்கு கேப்டன் பதவி வகித்த சாதனையாளர் வரிசையில் இங்கிலாந்தின் சார்லோட் எட்வர்ட்ஸ் (117 ஆட்டம்), ஆஸ்திரேலியாவின் பெலின்டா கிளார்க் (101) முதல் இரு இடங்களில் உள்ளனர்.