நாட்டினுள் மேலெழுந்து வரும் இனவாத மற்றும் மதவாத வன்முறைகளைக்கட்டுப்படுத்தும் அதிகாரத்தைப் பொலிசாரிடம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இன்று காலை கூடிய அமைச்சரவைக் கூட்டத்தின் போது இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அமைச்சர் கயந்த கருணாதிலக்க, நாட்டில் தலைதூக்கத் தொடங்கியுள்ள இனவாத, மதவாத செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் விசேட கவனம் செலுத்தியுள்ளனர்.
இவ்வாறான செயற்பாடுகள் பிரதேச வாரியாக தற்போது பரவலடையத் தொடங்கியிருப்பது குறித்தும் அரசாங்கத்தின் கவனம் திரும்பியுள்ளது.
இவற்றை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது என்பதுடன், நாட்டில் வாழும் சகலருக்கும் நீதி சமமான முறையில் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதிலும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தெளிவாக உள்ளனர்.
எனவே இனிவரும் காலங்களில் இனவாத, மதவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமிடத்து அவற்றைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அவ்வப்பிரதேச பொலிசாருக்கு வழங்கப்படவுள்ளது. பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் இதற்கான அதிகாரத்தைக் கொண்டிருப்பர்.
எந்தவொரு நபருக்கோ, அமைப்புக்கோ சட்டத்தை மீறியோ, இனவாத, மதவாத செயற்பாடுகளை மேற்கொள்ளவோ அரசாங்கம் அனுமதிக்கப் போவதில்லை என்றும் அமைச்சர் கயந்த கருணாதிலக்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.