பிணக்குவியல்களாலும், அடக்குமுறைகளாலும், ஊழல், மோசடிகளாலும் நாறிய நாட்டை நல்லாட்சி அரசு சுத்தப்படுத்தியுள்ளது என்றும், கடன்பொறிக்குள் இருந்து மீள்வதற்குரிய நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் புதிய நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற நிதி அமைச்சின் ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பதற்கான விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,
2015 ஜனவரி 8 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை கடன் சுமைக்குள் சிக்கியிருந்தது. பொருளாதாரம் வீழ்ச்சி கண்டிருந்தது. சர்வதேச மட்டத்தில் இலங்கையின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் நல்லாட்சி அரசு நாட்டைப் பொறுப்பேற்றது.
தண்ணீர் கேட்டுப் போராடியவர்கள் கொல்லப்பட்டனர். ஊடகவியலாளர்கள் மிரட்டப்பட்டனர். இப்படி பிணக்குவியல்களாலும், அடக்குமுறைகளாலும், ஊழல், மோசடிகளாலும் நாடு நாறியது. அதைச் சுத்தப்படுத்தி ஜனநாயகத்தை ஏற்படுத்தியுள்ளோம். கடன் நெருக்கடியை சமாளிப்பதற்குரிய திட்டங்களையும் வகுத்து வருகின்றோம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆஸ்திரேலியா சென்றுள்ளார். ஜனாதிபதி ஒருவர் பல வருடங்களுக்குப் பின்பே அந்நாட்டின் அழைப்பின் பிரகாரம் அங்கு செல்கின்றார். இது நாட்டுக்குக் கிடைத்த வெற்றியாகும்.
அதுமட்டுமல்ல, ரஷ்யா ஜனாதிபதி உட்படப் பலம் வாய்ந்த நாடுகளின் தலைவர்களும் எமது நாட்டுத் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்துகின்றனர். எமது பிரதமரும் நாட்டுக்குப் புகழ்சேர்க்கும் நபராகத் திகழ்கின்றார்.
ஆனால், கடந்த காலத்தில் வெளிவிவகாரக் கொள்கை சிதைக்கப்பட்டிருந்தது. சர்வதேச விசாரணைவரும் அபாயமிருந்தது. இன்று அந்நிலைமை சரிசெய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, இனவாதத்தைத் தூண்டுவதற்குக் குழுவொன்று முயற்சிக்கின்றது. இதற்கு இடமளிக்க முடியாது. இந்த நாட்டில் இனவாதத்துக்கும், பயங்கரவாதத்துக்கும் இனி இடமில்லை.
முக்கிய பொறுப்பை என்னிடம் ஒப்படைத்த ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். நாட்டுக்காக குறித்த அமைச்சுப் பதவியை அர்ப்பணிப்புடன் முன்னெடுப்பேன்.
கடன் சுமையிலிருந்து நாட்டை மீட்பதற்குரிய அடித்தளத்தை நிதி அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க இட்டுள்ளார். அவருக்கு எனது நன்றிகள். மீதமுள்ள பணியை நான் செய்வேன்” – என்றார்.
ஜாம்பவான்கள் போட்ட நிதி அமைச்சு என்ற சப்பாத்து ஜோடி எனக்குப் பொருத்தமற்றது : மங்கள
இலங்கை அரசியலில் ஜாம்பவான்களாகத் திகழ்ந்தவர்கள் வகித்த நிதி அமைச்சு பதவியை ஏற்கும்போது தான் அச்சப்பட்டார் என்று புதிய நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“நிதி அமைச்சு என்ற இந்த பெறுமதிமிக்க சப்பாத்து ஜோடியை என்.எம்.பெரேரா, ஜே.ஆர். ஜயவர்தன போன்ற ஜாம்பவான்கள் வகித்துள்ளனர். இப்படிபட்ட சப்பாத்து ஜோடி எனக்குப் பொறுத்தமற்றது என்றே நினைத்தேன்.
எனினும், 1994 ஆம் ஆண்டு முதல் அமைச்சராக இருக்கின்றேன். எனவே, குறித்த அமைச்சையும் என்னால் செய்யமுடியும் என நம்புகின்றேன்.
என்மீது நம்பிக்கை வைத்து குறித்த பொறுப்பை ஒப்படைத்த ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்” – என்றார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து வெளியிட்ட மஹிந்த அணி உறுப்பினரான ரோஹித அபேகுணவர்தன,
“நிதி அமைச்சரின் சப்பாத்து புதிதாகத்தான் இருக்கின்றது. ஆனால், அதன்கீழ்த் துண்டுதான் (சப்பாத்தின் அடிப்பகுதி) தேய்ந்துவிட்டது. ரவி கருணாநாயக்க
அதைப்போட்டுத் தேய்த்துவிட்டார். எனவே, முன்நோக்கிச் செல்வது கடினம்தான்” என்று குறிப்பிட்டார்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தனதுரையின் போது,
“தமிழ் மக்கள் தங்களுக்கும் (மங்கள சமவீரவுக்கும்) சப்பாத்து அணிவித்துள்ளனர்.
காணாமல்போனவர்களைக் கண்டுபிடிக்கவேண்டும். காணிகளை மீட்டெடுக்கவேண்டும் என்பது உட்பட பல பொறுப்புகளை செய்துமுடிக்க முன்நோக்கிச் செல்லவே குறித்த சப்பாத்து அணிவிக்கப்பட்டுள்ளது” – என்றார்.