ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 12 பிரபல அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மஹிந்த அணியான பொது எதிரணியுடன் இணைந்துகொள்வர் என இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பொது எதிரணியின் பிரதித் தலைவருமான ரஞ்சித் சொய்ஸா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியில் இது தொடர்பில் மேலும் கூறியுள்ளதாவது,
“இந்த மாற்றம் தொடர்பில் தற்சமயம் பொது எதிரணியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பேச்சுகளில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்களைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலரும் பொது எதிரணியுடன் இணைவதற்கான சாத்தியங்கள் தென்படுகின்றன.
நல்லாட்சி அரசு இப்போது தள்ளாட்டத்தில் இருக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் செய்துகொண்ட பரஸ்பர புரிந்துணர்வு ஒப்பந்தம் ஓகஸ்ட் 21இல் காலாவதியாகின்றது. அதன்பின் அந்த ஒப்பந்தத்தை புதுப்பிப்பதா அல்லது கைகழுவி விடுவதா என்று அரசு யோசித்துக்கொண்டிருக்கிறது.
இந்த விடயத்தில் சுதந்திரக் கட்சி பிரபலங்களைப்போலவே ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் திரிசங்கு நிலையில் காலம் கடத்தி வருகின்றார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மீது மக்கள் வைத்திருக்கும் அபிமானம் இன்னும் குறையவில்லை. எனினும், சுதந்திரக் கட்சி இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் கைப்பாவையாகி, ரணில் விக்கிரமசிங்கவின் தாளத்துக்கு நாட்டியமாடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையை மாற்ற பொது எதிரணியால் மட்டுமே முடியுமென மக்கள் ஆணித்தரமாக நம்புகிறார்கள்.
எனவே, பொது எதிரணியுடன் இணைந்துகொள்ள இரு கட்சிகளின் முக்கியஸ்தர்களும் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.