கனடா நாட்டின் மேற்கு கடற்கரை நகரமான ஸ்டீவ்ஸ் டனில் கடல்வாழ் உயிரினங்களின் அருங்காட்சியகம் உள்ளது.
ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து கடல்வாழ் உயிரினங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது கடல் சிங்கம் இருந்த குளத்தின் கரையில் வெள்ளை கவுன் அணிந்த சிறுமி அமர்ந்து இருந்தாள். அதில் இருந்த கடல் சிங்கம் சிறுமியை நோக்கி வேகமாக நீந்தி வந்தது.
அது வேடிக்கை காட்ட வருகிறது என்று பெற்றோர் நினைத்துக் கொண்டு இருந்த நிலையில் திடீர் என்று அந்த கடல் சிங்கம் சிறுமியின் ஆடையை கடித்து நீருக்குள் இழுத்துச் சென்றது.
இதைப் பார்த்து பெற்றோரும் பார்வையாளர்களும் அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டனர். உடனே பார்வையாளர்களில் ஒருவர் சட்டென தண்ணீருக்குள் குதித்து சிறுமியை கடல் சிங்கத்திடம் இருந்து மீட்டார். சிறுமி எந்த காயமும் இல்லாமல் மீட்கப்பட்டார்.
இந்த பரபரப்பு காட்சியை மிக்கேல் புஜிவாரா என்பவர் வீடியோவில் பதிவு செய்து யு டியூப்பில் வெளியிட்டார். நேற்று முன்தினம் மாலை வெளியான இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வேகமாக பரவியது. இதுவரை 15 லட்சம் பேர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளனர்.
இதுபற்றி புஜிவாரா கூறுகையில், நான் வழக்கமாக கடல் சிங்கத்தை வேடிக்கை பார்க்க செல்வேன். அப்போது அதை வீடியோவில் பதிவு செய்வேன். ஆனால் சிறுமியை கடல் சிங்கம் பிடித்துச் சென்றதை வீடியோ எடுத்தது எதிர்பாராமல் நிகழ்ந்தது என்றார். சிறுமியை மீட்டவர் யார் என்பது தெரியவில்லை என்றார்.
இதுபற்றி இங்கிலாந்து கடல்சார் பல்கலைக்கழக இயக்குனர் ஆன்ட்ரூ டைட்ஸ் கூறுகையில், ‘‘அந்த வீடியோவை பார்த்த போது மிருகங்களுக்கு உரிய மரியாதையை பார்வையாளர்கள் அளிக்க தவறிவிட்டார்கள் என்றே தோன்றுகிறது. எந்த மிருகமாக இருக்கட்டும் அதை சீண்டி விளையாடக் கூடாது, அதற்குரிய மரியாதையுடன் நடத்த வேண்டும்’’ என்றார்.
‘‘நல்ல வேளையாக சிறுமியின் வெள்ளை நிற ஆடையை கடல்சிங்கம் உணவு என்று நினைத்து கவ்வி இழுத்துச் சென்றுள்ளது. மற்றபடி பயங்கரம் எதுவும் நடைபெறவில்லை’’ என்று அவர் மேலும் சொன்னார்.