இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டரில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது என ராணி எலிசபெத் தெரிவித்துள்ளார். அதேபோல், வாழ்க்கையில் தோற்றவர்களின் செயல்தான் இது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்தில் அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி ஏரியனா கிராண்ட்டின் இசை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சுமார் 10.30 மணியளவில் நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கில் பலத்த சத்தத்துடன் குண்டுகள் வெடித்தது. இதனால் அங்கு குழுமியிருந்த 22 பேர் உயிரிழந்தனர். சுமார் 58-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மான்செஸ்டர் தாக்குதலுக்கு தாங்கள் தான் காரணம் என டெலகிராம் செயலி வழியாக ஐ.எஸ் இயக்கத்தினர் அறிவித்தபோதும், போலீசார் தரப்பில் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. இந்நிலையில், இத்தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய தற்கொலைப்படை தீவிரவாதியை போலீசார் அறிவித்துள்ளனர்.
லிபியாவில் இருந்து சிறுவயதில் அகதியாக இங்கிலாந்து வந்த 22 வயதான சல்மான் அபேதி என்பவர் இத்தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாகவும், இவர் மான்செஸ்டர் நகரின் பல்வேறு முகவரிகளில் வசித்து வந்துள்ளார் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதே தகவல்களை அமெரிக்க பாதுகாப்பு துறை அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர்.
இந்நிலையில், மான்செஸ்டர் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது என பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பக்கிங்காம் அரண்மனையில் ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
அதேபோல, வளைகுடா நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் ,”தாக்குதல் நடத்தியவர்களை அசுரர்களாக நான் அழைக்கப்போவது இல்லை, அப்படி அழைப்பதை தான் அவர்கள் விரும்புகிறார்கள். எனவே, வாழ்க்கையில் தோல்வியடைந்தவர்கள் செய்யும் செயல்” என கருத்து தெரிவித்துள்ளார்.
மான்செஸ்டர் தாக்குதலுக்கு உலக தலைவர்கள் கண்டனமும், பலியானவர்களுக்கு இரங்கலும் தெரிவித்துவருகின்றனர்.