அமெரிக்காவும் அதை பின்பற்றும் நாடுகளும் தான் தங்களை எதிர்க்கின்றன எனவும், ஐ.நா விதித்துள்ள பொருளாதார தடை உள்ளிட்ட அறிக்கையை ஏற்கமுடியாது எனவும் வடகொரியா தெரிவித்துள்ளது.
சர்வதேச அமைப்புகள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா தொடர்ச்சியாக பல்வேறு கட்ட ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்கா, ஐ.நா., ஐரோப்பிய யூனியன் உள்ளிட்டவை வடகொரியா மீது பொருளாதார தடைகளை விதிக்கும் முயற்சியில் தொடர்ந்து வருகின்றன.
இந்நிலையில், வடகொரியா அடையாளம் தெரியாத குறைந்த அளவில் செல்லும் ஏவுகணையை நேற்று சோதனை செய்ததாக தகவல்கள் வெளியானது. தெற்கு பியாங்கன் மாகாணத்தில் உள்ள புக்சங் பகுதியிலிருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை 500 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து, தங்கள் நாட்டில் கிழக்கு பகுதியில் உள்ள கடலில் விழுந்ததாக தென்கொரியா பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறினர்.
கடந்த ஒரு வார இடைவெளியில் வட கொரியா இரு ஏவுகணை சோதனைகளை நிகழ்த்தியது. இவற்றின் வெற்றியைத் தொடர்ந்து, அதிக அளவில் அவ்வகை ஏவுகணைகளை உருவாக்கி ராணுவத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் கிம் ஜோங்-உன் அறிவுறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கடும் கண்டனத்தை தெரிவித்தது. மேலும், வட கொரியா மீது புதிய பொருளாதாரத் தடைகளைப் பரிந்துரைக்குமாறு ஐ.நா. பொருளாதாரத் தடை ஆலோசனைக் குழுவைக் கேட்டுக் கொண்டது.
பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வட கொரியா மீது, பொருளாதாரத் தடைகள் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம் என்று ஐ.நா. பாதுகாப்புக் குழு தெரிவித்தது. இது தொடர்பான அறிக்கையை பாதுகாப்புக் குழு வெளியிட்டது.
இந்நிலையில், ஐ.நா அறிக்கையை நிராகரித்துள்ள வடகொரிய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ,”வடகொரியா தனது நாட்டுக்காக எடுக்கும் ஒவ்வொரு தற்காப்பு நடவடிக்கையிலும் குறை காண்பது வேடிக்கையாக இருக்கிறது. வடகொரியா மீது வெறுப்புணர்வும், விரோத உணர்ச்சியும் கொண்டவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அமெரிக்காவும் அந்த நாட்டைப் பின்பற்றுபவர்களும்தான் தற்போதைய அறிக்கைக்கு காரணமாக உள்ளனர்’ என்று தெரிவித்தார்.