பில்லி, சூனியம் அகலும் மிளகாய் யாகம்

கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூரில் சிதம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. இத்தல இறைவன் சிதம்பரேஸ்வரர், இறைவி சிவகாமசுந்தரி அம்பாள். பல்வேறு சிறப்புகள் உள்ள இந்த ஆலயத்தில் பஞ்சமுக மகாமங்கள பிரத்யங்கிராதேவி வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக கருதப்படும் இந்த தேவி, 9 அடி உயரத்தில் 5 முகங்கள் 10 கரங்களுடன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

இங்கு மாதந்தோறும் அமாவாசை தினத்தில் காலை 10.30 மணி முதல் பகல் 2 மணி வரை ‘நிகும்பலா மகா யாகம் என்னும் ‘மிளகாய் ஹோமம்’ நடைபெற்று வருகிறது. அப்போதுமூட்டை, மூட்டையாக மிளகாய் வற்றல் யாக குண்டத்தில் கொட்டப்படுகிறது. எவ்வளவு மிளகாய் கொட்டினாலும் நெடி வராது என்பது இந்த யாகத்தின் சிறப்பாக உள்ளது. அமாவாசை நாளில் நடைபெறும் இந்த நிகும்பலா மகா யாகத்தில் கலந்து கொண்டால் பில்லி, சூனியம் அகலும். செல்வாக்கு, புகழ் உயரும்.

இதே போல் பவுர்ணமி தினத்தில் நடைபெறும் யாகத்தில் கலந்து கொண்டால் 16 வகையான பேறுகளையும் பெறலாம் என்கிறார்கள். பவுர்ணமி அன்று காலை 11.30 மணி முதல் பகல் 2 மணி வரை யாகம் நடைபெறும்.

மேலும் இந்த ஆலயத்தில் உள்ள நவக்கிரகங்களை வழிபட்டால், வெளிநாடு செல்லும் யோகம் வந்து சேரும். ஏதாவது ஒரு வேண்டு தலுடன் யாகத்தில் கலந்து கொண்டால் 9 வாரங்களுக்குள் பக்தர்கள் நினைத்த காரியம் நிறைவேறும். இந்த ஆலயம் கும்பகோணத்தில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் 6 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.