வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் தேவை: பிசிசிஐ-க்கு கோலி, அனில் கும்ப்ளே வலியுறுத்தல்

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பவர் அனில் கும்ப்ளே. கடந்த ஆண்டு ரவி சாஸ்திரிக்குப் பதில் அனில் கும்ப்ளே தேர்வு செய்யப்பட்டார். அப்போது பந்து வீச்சு பயிற்சியாளராக பரத் அருண் இருந்தார். அவருக்குப் பதிலாக மாற்று பயிற்சியாளர் தேர்வு செய்யப்படவில்லை.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார்.

இந்த தொடருக்குப்பின் அவர் கூறுகையில் ‘‘தற்போது நான், புவனேஸ்வர் குமார், பும்ப்ரா, மொகமது ஷமி, இசாந்த் ஷர்மா போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளோம். இந்தியா வெளிநாட்டு தொடர்களில் அதிக அளவில் விளையாட வேண்டியுள்ளது. இந்நிலையில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பயிற்சியாளர் இருந்தால் நன்றாக இருக்கும்’’ என்று கூறியிருந்தார்.

இதே கருத்தினை ஏராளமானோர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் அணியின் தலைமை பயிற்சியாளர் கும்ப்ளேவும், இந்திய அணியின் கேப்டனான விராட் கோலியும் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளரை நியமிக்க வேண்டும் என்று, பிசிசிஐ-யில் சீர்திருத்தம் கொண்டு வருவதற்காக உச்சநீதிமன்றம் அமைத்துள்ள நிர்வாகக்குழுவில் எடுத்துக் கூறியுள்ளனர். அவர்களது கருத்தை நிர்வாகக்குழு ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது.

இதனால் விரைவில் இந்திய அணிக்கான வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி ஜூன் 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இருக்கிறது.