சைட்டம் கல்லூரிக்கு எதிரான ஆர்ப்பாட்டம்! கண்ணீர்ப்புகையினால் ஊடகவியலாளர் படுகாயம்

சைட்டம் மருத்துவக் கல்லூரிக்கு எதிரான மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க பொலிசார் மேற்கொண்ட கண்ணீர்ப்புகைத் தாக்குதலில் ஊடகவியலாளர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

மாலபேயில் அமைந்துள்ள தனியார் மருத்துவக் கல்லூரியான சைட்டம் மருத்துவக் கல்லூரியை மூடுவதற்கு வலியுறுத்தி மருத்துவ பீட மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டமொன்று இன்று கொழும்பில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு கட்டத்தில் லோட்டஸ் வீதி வழியாக ஜனாதிபதி செயலகத்தை நோக்கி முன்னேற முயன்ற போது பொலிசார் கண்ணீர்ப்புகைக் குண்டுத் தாக்குதல் மேற்கொண்டு ஆர்ப்பாட்டத்தைக் கலைத்தனர்.

அத்துடன் கலகமடக்கும் பொலிசாரின் நீர்த்தாரை வாகனமும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீரைப்பீய்ச்சியடித்து மாணவர்களை விரட்டியது.

இதன்போது பொலிசார் மேற்கொண்ட கண்ணீர்ப்புகைத் தாக்குதல் காரணமாக ஊடகவியலாளர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

தற்போது தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த ஊடகவியலாளருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.