தென்னிலங்கை அமைப்பொன்றை சேர்ந்த 300 க்கும் அதிகமான பௌத்த பிக்குகள் நாளைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து சமய அனுஷ்டானங்களில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணியில் சிங்கள மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வாழும் பிரதேசத்தில் கடந்த வாரம் பௌத்த விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
குறித்த விகாரை சாவகச்சேரி பிரதேச செயலகத்தின் அனுமதி பெறப்படாமல் கட்டிட வேலைகள் நடைபெற்றதனை அடுத்து பிரதேச செயலரினால் கட்டட வேலைகளை உடன் நிறுத்துமாறு எழுத்து மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அந்நிலையில் நாளை வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள 300க்கும் அதிகமான பௌத்த பிக்குகள் நாவற்குழியில் விகாரை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் சமய அனுஷ்டானங்களில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டின் கிழக்கு மற்றும் தென் பகுதியில் பௌத்த பிக்குகள் சிறுபான்மையின மக்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வரும் நிலையில் , நாளைய தினம் யாழ்ப்பானத்திற்கு 300 க்கும் அதிகமான பௌத்த பிக்குகள் வருகை தரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை கடந்த 18ம் திகதி கிளிநொச்சிக்கு வந்த தென்னிலங்கை அமைப்பு ஒன்று கிளிநொச்சி நகர் பகுதிகளில் சிறுபான்மையின மக்களை குறிக்கும் நிறமற்ற தேசிய கொடிகளை கட்டினர்.
அதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் கொடிகளை கட்ட என புறப்பட்ட அவர்கள் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவில்லை.
அந்த நிலையில் அன்றைய தினம் நள்ளிரவு பளை பகுதியில் போலீசார் மீது இனம் தெரியாத நபர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பி சென்று இருந்தனர். என்பதும் குறிப்பிடத்தக்கது