உலகின் மிக உயர சிகரமான எவரெஸ்ட்டில் (8,848 மீட்டர்) ஏறி சாதனை படைப்பதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் நேபாள நாட்டுக்கு வருகின்றனர்.
கடந்த மாத இறுதியில் 7,950 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள நான்காம் முகாம் பகுதியில் சிகரம் ஏறுவதில் ஈடுபட்டிருந்த 2 நேபாள நாட்டவர் உள்பட 4 பேர் திடீரென மாயமாகினர். அவர்களின் கதி என்ன என்பது தெரியாமல் இருந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஷெர்பா பழங்குடியினர் அந்த முகாம் பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கூடாரம் அமைத்து தங்கியிருந்த 4 பேரும் பிணமாக கிடந்தனர். அவர்கள் 4 பேரும் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடந்த ஒரு மாதத்தில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியபோது பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.