சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: இந்திய அணி இன்று இங்கிலாந்து பயணம்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஜூன்) 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. இதில் ‘டாப் 8’ அணிகள் பங்கேற்கின்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியனான இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோதவேண்டும். ‘லீக்‘ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் இரண்டு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் நகரில் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இந்திய அணி கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவித்தது. இதேபோல சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் (ஐ.சி.சி.) பாதுகாப்பு குறித்து மறு ஆய்வு செய்தது.

இந்த நிலையில் ஏற்கனவே திட்டமிட்டப்படி இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விளையாடுவதற்காக இன்று இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை தக்க வைத்துக் கொள்ளும் ஆர்வத்தில் உள்ளது.

இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 4-ந்தேதியும், 2-வது ஆட்டத்தில் இலங்கையை 8-ந்தேதியும், கடைசி லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை 11-ந்தேதியும் சந்திக்கின்றன.

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் விவரம்:-

விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகார் தவான், ரகானே, யுவராஜ் சிங், ஹர்த்திக் பாண்டியா, டோனி (விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், உமேஷ் யாதவ், முகமது ‌ஷமி, பும்ரா, தினேஷ் கார்த்திக்.