தென்ஆப்பிரிக்கா – இங்கிலாந்து மோதும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது

‘மினி உலக கோப்பை’ என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக டிவில்லியர்ஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. அதற்கு முன்பாக தென்ஆப்பிரிக்க அணி, இங்கிலாந்துடன் மூன்று ஒரு நாள் போட்டிகளில் ஆடுகிறது.

இதன்படி முதலாவது ஒரு நாள் போட்டி லீட்சில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. சாம்பியன்ஸ் போட்டிக்கு சிறந்த முறையில் தயாராவதற்கு இந்த தொடர் இவ்விரு அணிகளுக்கும் அருமையான வாய்ப்பாகும். பயிற்சி ஆட்டங்களில் ஓய்வு எடுத்த தென்ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ் எந்த மாதிரி ஆடப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

ஐ.பி.எல்.-ல் சோபிக்க தவறிய அவர் சர்வதேச போட்டியில் மிரட்டுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஐ.சி.சி. தரவரிசையில் 123 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கும் தென்ஆப்பிரிக்கா மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் புள்ளி எண்ணிக்கை 125 ஆக உயரும். மூன்று ஆட்டங்களிலும் தோற்றால் முதலிடத்திற்கு ஆபத்து இல்லை. ஆனால் புள்ளி எண்ணிக்கை 120 ஆக குறையும்.

2015-ம் ஆண்டு உலக கோப்பையில் முதல் சுற்றுடன் பரிதாபமாக வெளியேறிய இங்கிலாந்து அணி அதன் பிறகு சரிவில் இருந்து எழுச்சி பெற்றுள்ளது. இப்போது ஆக்ரோஷமான அணுகுமுறையை கடைபிடிக்கும் அந்த அணி கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு நாள் போட்டியில் 300 ரன்களுக்கு மேல் 12 முறை எடுத்துள்ளது. ஐ.பி.எல்.-ல் மதிப்பு மிக்க வீரர் விருதை பெற்ற ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், இந்த தொடரிலும் தாக்கத்தை ஏற்படுத்துவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இரு அணிகளும் பலம் வாய்ந்தவை என்பதால் போட்டியும் கடுமையாக இருக்கும். இருப்பினும் உள்ளூர் சூழல் இங்கிலாந்துக்கு சாதகமான அம்சமாகும்.

இவ்விரு அணிகளும் இதுவரை 56 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அதில் 28-ல் தென்ஆப்பிரிக்காவும், 24-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் ‘டை’ ஆனது. மூன்று ஆட்டங்களில் முடிவு இல்லை.

போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

தென்ஆப்பிரிக்கா: டிவில்லியர்ஸ் (கேப்டன்), அம்லா, பெஹர்டைன், குயின்டான் டி காக், பாப் டு பிளிஸ்சிஸ், டுமினி, இம்ரான் தாஹிர், கேஷவ் மகராஜ், டேவிட் மில்லர், மோர்னே மோர்கல், கிறிஸ் மோரிஸ், வெய்ன் பார்னல், பெலக்வாயோ, பிரிடோரியஸ், ரபடா.

இங்கிலாந்து: இயான் மோர்கன் (கேப்டன்), ஜோ ரூட், ஜாசன் ராய், பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹாலெஸ், லியாம் பிளங்கெட், அடில் ரஷித், ஜாக் பால், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.

இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.