ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், தற்போது `அவதார்’ படத்தின் அடுத்தடுத்த பாகங்களை இயக்கி வருகிறார். `அவதார்’ படத்தின் முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், அடுத்த ஐந்து பாகங்களை தற்போது இயக்கி வருகிறார்.
`அவதார்’ படத்தை இயக்கும் அதேவேளையில், டெர்மினேட்டர் படத்தின் அடுத்த பாகத்தின் மூலம் அர்னால்டுடன் மீண்டும் இணைய இருக்கிறார். முன்னதாக `டெர்மினேட்டர்’ படத்தின் முதல் இரு பாகங்களை ஜேம்ஸ் கேமரூன் இயக்கி தயாரித்திருந்தார். இதையடுத்து அடுத்த மூன்று பாகங்களும் வெளியாகியுள்ள நிலையில், `டெர்மினேட்டர்’ படத்தின் ஆறாவது பாகம் தற்போது தயாராக உள்ளது.
இதில் கடைசியாக வெளியான, `டெர்மினேட்டர் ஜெனிசிஸ்’ அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில், `டெர்மினேட்டர்’ படத்தின் அடுத்த பாகம் விரைவில் உருவாக இருப்பதாக அர்னால்டு தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த அர்னால்டு இதுகுறித்து தெரிவித்த போது, நான் மீண்டும் வருகிறேன். அவரிடம் (ஜேம்ஸ் கேமரானிடம்) இருக்கும் சில வித்தியாசமான, புதுமையான யோசனைகளுடன் `டெர்மினேட்டர்’ படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகும் என்று தெரிவித்தார்.
`டெர்மினேட்டர்’ படத்தின் ஆறாவது பாகத்தை `டெட்பூல்’ படத்தை இயக்கிய ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர் டிம் மில்லர் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது.