‘கபாலி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து பா.ரஞ்சித் – ரஜினி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. ரஜினியின் 164-வது படமாக உருவாக உள்ள இப்படத்தை நடிகர் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ள, இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை ஹூமா குரோஷி ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் படக்குழு சார்பில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அது ஒருபக்கம் இருக்க, இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனியும் இப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்திற்காக சமுத்திரக்கனி சுமார் 2 மாதங்கள் வரை கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இவ்வாறாக ரஜினியின் புதிய படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், இப்படத்தின் தலைப்பை நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதன்படி படத்திற்கு `காலா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தில் ரஜினியின் பெயர் கரிகாலன் என்பது தலைப்பை பார்க்கும் போதே தெரிகிறது. தலைப்பிலேயே `காலா’ கரிகாலன் என்று வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் காலா கரிகாலக் படத்தில் எடிட்டிங் பணியை ஆண்டனி பிஜே ரூபனும், சண்டைப்பயிற்சியை திலீப் சுப்பராயனும், பாடல் வரிகளை கபிலன் மற்றும் உமாதேவியும் மேற்கொள்கின்றனர். சாண்டி டான்ஸ் மாஸ்டராக பணியாற்றுகிறார்.
இது மும்பை தாராவியில் நடப்பது போன்ற கதை. எனவே, தாராவி போலவே சென்னையில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.