பாக்கெட் உணவுகளை சாப்பிடுவது உடல் நலத்தை பாதிக்குமா?

புரோசோன் புட் என்பது என்ன? உறைபனி வெப்பநிலைக்கு கீழே, உணவை பாதுகாப்பதற்குத்தான் இப்படி பெயர். புரோசோன் புட் என்ற பெயரில் இப்போது சூப்பர் மார்க்கெட்டுகளில் நிறைய பாக்கெட் உணவுகள் கிடைக்கின்றன. இவற்றைப் பயன்படுத்தலாமா என்பது இல்லத்தரசிகளுக்கு இருக்கும் பெரிய பிரச்சினை.

உணவு நிபுணர்களோ பல முன்னெச்சரிக்கைகளோடு இதனை பயன்படுத்த வேண்டும் என்று பயமுறுத்துகிறார்கள். புரோசோன் புட் என்பது, உணவு நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்கவும், உணவின் தன்மை, வைட்டமின் போன்றவை மாறாமல் இருக்கவும் உறைந்த நிலையில் பாதுகாக்கும் முறையாகும். இது மைனஸ் 18 டிகிரி செல்சியசில் பராமரிக்கப்படுகிறது.

இதன் மூலம் மாதக்கணக்கில் ஓர் உணவுப் பொருளைப் பாதுகாக்க முடியும். குறிப்பிட்ட பருவத்தில் மட்டுமே கிடைக்கும் பழங்கள், காய்கள், மீன்கள், பால், சிற்றுண்டிகள் போன்றவற்றை எப்போதும் பயன்படுத்துவதற்கு இந்த முறையை உபயோகிக்கிறார்கள்.

சின்ன குளிர்சாதனப் பெட்டியில் நாம் காய்கறிகளை சில நாட்களுக்குப் பாதுகாப்பது போல, மிகப்பெரிய அறையில் குளிர்சாதன வசதி செய்து இதுபோல் பதப்படுத்தி வைக்கிறார்கள். வெளிநாடுகளில் பிரபலமான இந்த முறை தற்போது இந்தியாவிலும் பரவலாகி வருகிறது. இந்த புரோசோன் உணவில் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன.

வாங்கிய உணவை உடனே பயன்படுத்த வேண்டும். குறிப்பிட்ட வெப்பநிலையில் கொதிக்க வைத்துப் பயன்படுத்த வேண்டும். சத்துக்கள் குறைவாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. வாங்கி வந்த உணவை மீண்டும் நம் வீட்டு குளிர்சானப் பெட்டியில் வைத்து பயன்படுத்தினால் பல உடல் நல பிரச்சினைகள் ஏற்படுவது நிச்சயம். குறிப்பாக, குழந்தைகள், முதியவர்கள், நீரிழிவு நோயாளிகள், புற்றுநோயாளிகள், செரிமான பிரச்சினை இருப்பவர்கள், இந்த மாதிரியான உணவுகளை வாங்கி பயன்படுத்தக்கூடாது.