தினமும் நீங்கள் பள்ளி செல்கையில், டாட்டா சொல்லும் ஒரு குட்டிப் பாப்பா, ஒருநாள் திடீரென்று வரவில்லையென்றால் உங்கள் மனதுக்குள் ஏதோ ஒருவித கவலை தோன்றும் இல்லையா? அந்தப் பாப்பா உங்கள் உடன் பிறந்தவராக இருந்தால், கவலைக்கும், சோகத்திற்கும் சொல்ல வேண்டுமா? பெற்ற தாயும், உடன் பிறந்த நீங்களும் அழுது புலம்பி, தேடித் திரிந்து துடித்துப் போவீர்கள்தானே?
குழந்தைகள் காணாமல்போக கடத்தலும் காரணமாக இருக்கலாம். மே 25-ம் தேதி ‘உலக குழந்தை கடத்தல் தடுப்பு தினமாகும். குழந்தைகள் கடத்தல் பற்றிய உலகளாவிய ஆய்வு சொல்லும் ரகசியம் என்ன தெரியுமா? “பிள்ளைகளின் நலன் கருதி அக்கறையுடன் நாம் விதிக்கும் கட்டுப்பாடுகள்கூட குழந்தைகளின் மனதுக்குள் காயம்போல பதிந்திருக்கும்.
அந்த கட்டுப்பாடுகளை உடைக்கும் வகையில், அவர்கள் மீது அக்கறை காட்டுவதுபோலவும், ஆசைகளை நிறைவேற்றுவதுபோலவும் ஒருவர் பேசிவிட்டால் குழந்தைகள் உடனே அவர்களின் ஆசை வார்த்தைக்கு மயங்கிச் சென்றுவிடுவார்கள்.” என்கிறது அந்த ஆய்வு.
உன்னுடன் விளையாட ஒரு அழகிய நாய்க்குட்டியை பிடித்துத் தருகிறேன் வருகிறாயா? என்று கேட்டால் உடனே ஆசையாய் தலையசைக்கும் குழந்தைகள்தான் அனேகம். அதனால்தான், “ஒன்பது பேரில் 7 குழந்தைகள் முன்பின் தெரியாதவர்களுடன் 90 வினாடிகளுக்குள் சென்றுவிடுவதாக” ஆய்வில் கணிக்கப்பட்டு உள்ளது.
எனவே கட்டுப்பாடுகளும் குழந்தைகளின் மனதை காயப்படுத்தும் என்ற ரகசியத்தை தெரிஞ்சுக்கோங்க. நமக்கு மிகவும் தெரிந்த இடங்களான அருகில் உள்ள பூங்காவில், மைதானத்தில்தானே நம் குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது என்று அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம். உங்கள் செல்லங்களின் கண்காணிப்பில் கூடுதலாக ஒரு கண் வையுங்கள்!