நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சமீபத்தில் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
மாவட்டம் வாரியாக ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த் கடைசி நாள் பேசும் போது அரசியலுக்கு வருவதை சூசகமாக தெரிவித்தார்.
நான் அரசியலுக்கு வந்தால் நல்லவர்களை மட்டுமே அருகில் வைத்துக் கொள்வேன். கெட்டவர்கள் விலகிச் சென்று விடுங்கள் என்றார். கடமையை செய்யுங்கள் போர்வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று ரசிகர்கள் மத்தியில் பேசினார்.
ரஜினியின் இந்த கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் வலுத்து வருகிறது. தமிழ் ஆர்வலர்கள் ரஜினிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பா.ஜனதா ரஜினியின் வருகைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா ரஜினி வருகைக்காக கதவு திறந்தே இருக்கிறது என்று சமீபத்தில் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தெலுங்கானாவில் சுற்றுப்பயணம் செய்யும் அமித்ஷாவிடம் ரஜினியின் அரசியல் பேச்சு பற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:-
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி சூசகமாக தெரிவித்து உள்ளார். என்னைப் பொறுத்தவரை நல்லவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். ரஜினிகாந்த் முன்பே அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். அவரது வருகையை மனதார வரவேற்கிறேன்.
ரஜினிகாந்த் பா.ஜனதாவில் சேர வேண்டும் என்று விரும்பினால் நாங்கள் அதை முழுமனதுடன் வரவேற்போம்.
ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இதற்காக அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரங்களில் பா.ஜனதா தலையிட விரும்பவில்லை. இந்த வெற்றிடத்தை நிரப்ப பா.ஜனதா கட்சி தன்னை வலுப்படுத்திக் கொள்ளும்.
மோடி அரசியல் வளர்ச்சித் திட்டங்கள்தான் முன்னெடுத்து செல்லப்படுகிறது.
சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என்ற பேதம் இல்லாமல் நாடு முழுவதும் 4½ கோடி வீடுகளுக்கு கழிவறை கட்டித்தரப்பட்டுள்ளது.
ஆயிரம் கிராமங்களில் அரசு மின் உற்பத்திக்கான பணிகளை செய்துள்ளது. இப்படி பா.ஜனதா சிறுபான்மையினர் நலனுக்காக பாடுபடுகையில் எங்களை சிறுபான்மையினரின் விரோதிகளாக சித்தரிப்பது தவறு.
இவ்வாறு அமித்ஷா கூறினார்.