ஜனாதிபதி பதவி காலம் 5 ஆண்டுகள் ஆகும். தற்போது ஜனாதிபதியாக இருக்கும் பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் வருகிற ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரான பிரணாப் முகர்ஜி இந்திரா, ராஜீவ், நரசிம்மராவ், மன்மோகன் சிங் மந்திரி சபைகளில் நிதி மந்திரி, ராணுவ மந்திரி, வெளியுறவு மந்திரி என முக்கிய இலாகா மந்திரியாக பணியாற்றினார்.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது 2012-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2012 ஜூலை 25-ந் தேதி ஜனாதிபதியாக பதவி ஏற்றார். வருகிற ஜூலை 25-ந்தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.
மீண்டும் அவர் ஜனாதிபதி தேர்தலில் நிற்பாரா? என பேசப்பட்டு வந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பிரணாப் முகர்ஜி சமீபத்தில் தகவல் வெளியிட்டார். அதில் எனக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கிறது. ஜூலை 25-ந்தேதி புதிய ஜனாதிபதி பதவி ஏற்பார் என்று குறிப்பிட்டு இருந்தார்.
எனவே புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுகிறார். பா.ஜனதா சார்பில் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் நிறுத்தப்படுகிறார். எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே ஜனாதிபதி தேர்தலில் போட்டி உறுதியாகி உள்ளது.
பா.ஜனதா ஆட்சியில் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது நடந்த ஜனாதிபதி தேர்தலில் அப்துல்கலாம் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 2-வது முறையாக பா.ஜனதா ஆட்சியின் போது ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் தொடங்கி விட்டது.
எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் ஓட்டுப்போட்டு ஜனாதிபதியை தேர்வு செய்வார்கள். பாராளுமன்றத்தில் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை எம்.பி.க்கள் ஆதரவு உள்ளது.
இதே போல் பெரும்பான்மையான மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் 4 மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றியது. குறிப்பாக உத்தரப்பிரதேசத்திலும், உத்தரகாண்டிலும் அமோக வெற்றி பெற்றதால் பெருவாரியான எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா பெற்றுள்ளது.
இது தவிர அகாலி தளம், சிவசேனா, தெலுங்கு தேசம், பிஜூ ஜனதா தளம் ஆகிய கட்சிகள் ஆதரவும் உள்ளது. இதற்கிடையே பாராளுமன்றத்தில் 2-வது பெரிய கட்சியாக விளங்கும் அ.தி.மு.க.வின் ஆதரவை பெறவும் பேச்சுவார்த்தை நடக்கிறது.
அ.தி.மு.க.வின் இரு அணிகளுமே ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதாவை ஆதரிக்கும் என்று தெரிகிறது. இதனால் ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.
இதையடுத்து ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தொடர்பாக பிரதமர் மோடி மூத்த மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா தெலுங்கானாவில் சுற்றுப்பயணம் செய்வதால் அவர் ஆலோசனையில் கலந்து கொள்ளவில்லை. வெங்கையா நாயுடுவும் பங்கேற்கவில்லை.
மோடி பிரதமர் ஆன பின்பு பா.ஜனதாவில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டு வந்தனர். ஆரம்பத்தில் அத்வானிதான் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தப்படுவார் என்று பேசப்பட்டு வந்தது.
ஆனால் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மீண்டும் விசாரணை நடப்பதால் அத்வானிக்கு ஜனாதிபதி ஆகும் வாய்ப்பே இல்லாமல் போய் விட்டது.
இந்த நிலையில் தலித் அல்லது பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவரை ஜனாதிபதியாக தேர்வு செய்ய பா.ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
நாடு முழுவதும் தாழ்த்தப்பட்ட மற்றும் தலித் இன மக்கள் கணிசமாக உள்ளனர். தலித் நிறுத்தப்படுவதன் மூலம் அவர்களது ஆதரவை பெறலாம். இது அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலிலும் கை கொடுக்கும் என்று பா.ஜனதா கணக்கு போட்டு வைத்திருக்கிறது.
இதை மனதில் கொண்டு தான் சமீபத்தில் நாடு முழுவதும் பா.ஜனதா சார்பில் தீண்டாமை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.
தலித் வீடுகளில் பா.ஜனதா தலைவர்கள் சென்று உணவு சாப்பிட்டனர். தேர்தலுக்கு இன்னும் 2 மாதமே இருப்பதால் விரைவில் பா.ஜனதா வேட்பாளரை தேர்வு செய்ய உள்ளது.