தமிழக பா.ஜனதா சார்பில் மத்திய அரசின் மக்கள் நல திட்டங்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதற்காக தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தை பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் இல. கணேசன் எம்.பி, தேசிய செயலாளர் எச்.ராஜா, கேசவ விநாயகம், சவேரா சக்கரவர்த்தி, அனுசந்திர மவுலி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் எச். ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் கட்டப்பஞ்சாயத்து நடத்துவதாக மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். ஒரு பொறுப்பான அரசியல் தலைவர் பிரதமரை விமர்சிக்கும் வார்த்தையா இது? மு.க.ஸ்டாலின் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் தி.மு.க. நடத்திய கட்டப்பஞ்சாயத்துக்களை நாங்கள் சொல்ல வேண்டியதிருக்கும். அதை தி.மு.க. எதிர்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியதாவது:-
மத்திய அரசு அமுல்படுத்தி இருக்கும் மக்கள் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்காமல் மத்திய அரசு எதுவும் செய்யாதது போன்ற பொய்யான தோற்றத்தை எதிர் கட்சிகள் ஏற்படுத்தி வருகின்றன.
விவசாயிகளுக்காக பயிர் கடன், பயிர் பாதுகாப்பு திட்டங்களை அறிவித்தும் முறையான கணக்கெடுப்பு நடத்தி விவசாயிகளுக்கு உதவ மாநில அரசு தவறிவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.