ரஜினியின் `காலா’ படத்தில் 4 தேசிய விருது பிரபலங்கள்

`கபாலி’ பட வெற்றியை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நேற்று வெளியானது. `காலா’ கரிகாலன் என்ற பெயரில் போஸ்டர்கள் வெளியாகி இருந்தது. படத்தில் ரஜினியின் பெயர் கரிகாலன். படத்தில் அவரை `காலா’ என்று அழைப்பார்கள் என்று ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

மும்பை தாராவியில் வாழும் ஒரு தமிழனின் வாழ்க்கையை படமாக எடுக்க உள்ளதாக இயக்குநர் ரஞ்சித் தெரிவித்திருக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வருகிற 28-ஆம் தேதி மும்பையில் தொடங்க இருக்கிறது. அதைத்தொடர்ந்து சென்னையிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். அதற்காக சென்னையில் மும்பை போன்ற பிரம்மாண்ட செட்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுஒருபுறம் இருக்க `காலா’ படக்குழுவில் தேசிய விருது பெற்ற 4 பிரபலங்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளர் தனுஷ் – நடிப்பு – `ஆடுகளம்’, தயாரிப்பு – `காக்கா முட்டை’, `விசாரணை’

எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் – `ராக்’, `ரக் பிராக்’, `நாக்கா கரிட்ராமு’, `தி டெரரிஸ்ட்’, `வானபிரசாதம்’, `கண்ணத்தில் முத்தமிட்டாள்’, `ஃபிராக்’ உள்ளிட்ட 7 படங்களில் சிறந்த எடிட்டராக தேசிய விருது பெற்றிருக்கிறார்.

நடிகை அஞ்சலி பாட்டீல் – `நா பங்காரு தள்ளி’ என்ற படத்திற்காக சிறப்பு தேசிய விருது பெற்றிருந்தார்.

நடிகர் சமுத்திரக்கனி – சிறந்த துணை நடிகராக `விசாரணை’ படத்திற்கு தேசிய விருது பெற்றிருந்தார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. `காலா’ குறித்த முழு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.