மைத்திரி உத்தரவு! மகிந்தவின் புதல்வர்கள் களத்தில்

இயற்கையின் சீற்றத்தினால் தென் மாகாணத்தின் பல்வேறு நகரங்கள் நீர்மூழ்கியுள்ளதுடன், பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளமையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 24 மணிநேரமும் பெய்த கனமழையினால் தென் மாகாண நகரங்கள் பல வெள்ளக்காடாக மாறி காட்சியளிக்கிறது.

இந்த அனர்த்தம் காரணமாக ஆறு லட்சம் பேர்வரை பாதிக்கப்பட்டுள்ளதுடன், இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கிப் போயுள்ளது.

இதேவேளை, இதுவரை வெளியான தகவல்களின்படி, 100 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன், பலர் காணாமல் போயுள்ளனர் என தெரியவந்துள்ளது.

மீட்புப் பணிக்காக முப்படையினரும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். தவிர, இளைஞர்கள், மற்றும் சில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்களும் இணைந்துள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

இதேவேளை. பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து நிவாரண உதவிகளையும் விரைந்து முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவுஸ்ரேலியாவில் இருந்து பணிப்புரை விடுத்துள்ளார்.

மக்களின் இந்த துயர் மிகுந்த காலகட்டத்தை அனைவரும் இணைந்து மீட்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டுவருகின்றது.

இதுவொருபுறமிருக்க, இந்திய அரசாங்கம் மக்களுக்கான உடனடித் தேவைகளுக்காக இரண்டு நிவாரணக் கப்பல்களை அனுப்பி வைத்துள்ளது. நாளை அந்த கப்பல்களில் ஒன்று கொழும்பு துறைமுகத்தை சென்றடையும் என்று இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்திருக்கிறது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர்களும் மக்களுக்கான நிவாரணம் வழங்கும் செயற்பாடுகளில் இறங்கியுள்ளனர். இது குறித்து நாமல் ராஜபக்ச தன்னுடைய உத்தியோகபூர்வ முகப்புத்தகப் பக்கத்தில் வீடியோ காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

இந்த ஆண்டு இலங்கை சந்திக்கும் மிகப்பெரிய அனர்தத்தில் இரண்டாவது அனர்த்தம் இதுவாக பதிவாகியுள்ளது. குப்பை மேடு சரிந்து விழுந்து மக்களை துயரில் ஆழ்த்தியிருந்த தருணத்திலும், அந்த இழப்பில் இருந்து மக்கள் மீண்டு வரும் பொழுது வெள்ளப் பெருக்கும் மண் சரிவும் அந்த மக்களை மீண்டும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.