ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து பா.ஜ.க.வுக்கு எதிராக பொது வேட்பாளரை களமிறக்குவது குறித்து ஆலோசனை நடத்தி வந்தார்.
இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக, எதிர்க்கட்சி தலைவர்களுக்கு இன்று மதியம் பாராளுமன்றத்தில் சோனியா காந்தி விருந்து அளித்தார். 17 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இந்த விருந்தில் கலந்து கொண்டனர்.
மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி உள்ளிட்டோர் அதில் முக்கியமானவர்கள்.
பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் இந்த விருந்தில் கலந்து கொள்ளவில்லை. முன் கூட்டியே வேறு ஒரு நிகழ்ச்சி இருந்ததால் கலந்து கொள்ள முடியவில்லை என்று கூறப்பட்டது.
இந்நிலையில், சோனியா காந்தி நிகழ்ச்சியில் பங்கேற்காத நிதிஷ்குமார் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ள மதிய விருந்தில் நாளை பங்கேற்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
மொரிஷியஸ் பிரதமர் அனரூத் ஜகநாத் வருகையை கவுரவிக்கும் வகையில் இந்த விருந்துக்கு மோடி ஏற்பாடு செய்துள்ளார். நிதிஷ் குமார் போன்ற மூத்த தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது பெரும்பாலான எதிர்க்கட்சிகள் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நிதிஷ் குமார் ஆதரவு தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை தேர்வு செய்வதில் காங்கிரஸ், பா.ஜ.க. மும்மரமாக உள்ள நிலையில், சோனியாவின் நிகழ்ச்சியை தவிர்த்த நிதிஷ் குமார் பிரதமர் மோடியுடன் விருந்து சாப்பிட சம்மதம் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.