நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கடிதங்கள் அனுப்பியும், தமிழகம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டியும் வற்புறுத்தி வருகிறார்கள். சமீபத்தில் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அப்போது, ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினிகாந்த், “வாழ்க்கையில் எதிர்ப்பு, ஆதரவு இருப்பது சகஜம்தான். எதிர்ப்பு இல்லாமல் வளரவே முடியாது. அதுவும் அரசியலில் எதிர்ப்புதான் மூலதனம். போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்” என்று தனது அரசியல் பிரவேசம் பற்றி சூசகமாக குறிப்பிட்டார். எனவே, அவர் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது.
ஜனநாயக நாட்டில் யார் வேண்டும் என்றாலும் அரசியலுக்கு வரலாம் என பலர் கருத்து தெரிவித்தனர். ரஜினிகாந்த் அரசியல் குறித்து பேசி உள்ள நிலையில், பா.ஜ.க.வின் கதவு ரஜினிக்கு எப்போதும் திறந்தே இருக்கும் என பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித் ஷா அழைப்பு விடுத்திருந்தார். இதுதொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
இந்நிலையில், ரஜினிகாந்த் பா.ஜ.க.வுக்கு வரும்படி அழைப்பு விடுக்கவில்லை என்று அமித் ஷா கூறியுள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் நிருபர்களுக்கு அமித் ஷா பேட்டி அளித்தபோது, “ரஜினிகாந்த் அரசியலுக்கு வர விரும்பினால் அவரை வரவேற்பேன் என்றுதான் கூறினேன். இதில், ‘அரசியல்’ என்ற வார்த்தையைத் தான் பயன்படுத்தினேன், பா.ஜ.க. என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதும், வராததும் அவருடைய விருப்பம். முடிவு அவர் கையில் உள்ளது” என்றார்.