சகல வளங்களும் அருளும் சாகம்பரி தேவி விரதம்

பராசக்தி பக்தர்களைக் காக்க பல்வேறு திருக்கோலங்களைத் தாங்கியருள்கிறாள். அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகியின் திருக்கோலங்களில் சாகம்பரி தேவியின் திருவடிவமும் ஒன்று.

சாகா என்றால் மாமிசமில்லாத உணவுப் பொருள் என்றுமொரு பொருள் உண்டு. காரி எனில் அதைக்கொண்டவள் எனவே சாகாரி எனும் பொருள்படும்படி மகாராஷ்ட்ராவில் இத்தேவியை விரதமிருந்து வணங்குகிறார்கள். புரட்டாசி மாத பௌர்ணமி தினத்தில் சிவனோடு கூடிய அம்பாள் ஆலயங்களில் நிறைமணி காட்சி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

உலக மக்களின் பஞ்சத்தைப் போக்கியருளிய தேவியின் கருணைக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் இனியும் உலகில் கடும்பஞ்சம் தோன்றக் கூடாது என வேண்டிக் கொண்டும் நிறை மணிக்காட்சி விழா நடத்தப்படுகிறது. எத்தனை உணவு பலகாரங்கள் உண்டோ, எத்தனை காய்கறி, கீரை வகைகள் உண்டோ அத்தனை பொருட்களாலும் ஆலயத்தில் தோரணப் பந்தல் உருவாக்கி மகிழ்வர்.

சில ஆலயங்களில் அம்பாள், மற்றும் ஈசன் சந்நதியில் பந்தல் போல மரக்கட்டைகளைக் கட்டுவர். பின் கயிற்றில் காய்கறிகளையும் பழவகைகளையும் மாலை போல் தொடுத்து அலங்காரமாகத் தொங்கவிடுவர். அனைத்து விதமான காய்கறிகளையும் கீரைகளையும் பசுமைத் தோரணமாகக் காண்பதே கண்களுக்கு விருந்தாக இருக்கும்.

நவராத்திரி கொலு பொம்மைகளைப் போல அம்பாளுக்கு முன்பு அலங்காரமாக வைக்கப்பட்டிருக்கும் காய்கனிகள் மனதைக் கவரும். இதைக் கண்டு களிக்கவே குழந்தைகளை அழைத்துக் கொண்டு கூட்டம் கூட்டமாய் பக்தர்கள் அன்று ஆலயத்திற்கு வருவார்கள். தங்கள் வசதிக்கேற்ப காய்கறிகளையும், உணவுப் பொருட்களையும் காணிக்கையாகத் தருவார்கள். அடுத்த நாள் அத்தனை உணவுப் பண்டங்களும் பிரசாதமாக அனைவருக்கும் பகிர்ந் தளிக்கப்படும்.

சாகம்பரி தேவிக்கு கர்நாடகா, உத்திராஞ்சல், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், மேற்குவங்கம், மகாராஷ்ட்டிரா ஆகிய மாநிலங்களில் ஆலயங்கள் உள்ளன. வறுமையில் உழல்பவர்கள் சாகம்பரி சஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்தால் உண்ண உடை, பருக நீர், உடுக்க உடை, இருக்க இடம் போன்றவை குறைவின்றிக் கிடைக்கும் என்பது ஐதீகம். வேண்டிய கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறும் என்பதும் பலருடைய அனுபவபூர்வமான நம்பிக்கை.