இன்று நாட்டில் உள்ள அதர்ம ஆட்சியே அனர்த்தத்திற்கு காரணம்! ஞானசார தேரர்

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலையின் விளைவாக ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்திற்கு புத்த மதத்தினை கண்டுகொள்ளாமல் இருப்பதே காரணமாகும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது அதர்ம ஆட்சி நிலவுகின்றது அதனால்தான் இவ்வாறான அனர்த்தங்கள் இடம்பெறுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்

எனவே போலி தெய்வங்களிடம் குறைகளை கூறாமல் அனர்த்தம் நேரக்கூடாது என உண்மை தெய்வமான புத்த பெருமானை பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

வெள்ள அனர்த்தம் குறித்து பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

நாட்டில் பாரிய வெள்ள அனர்த்த நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது. அதனால் 70 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

அதனால் வழமை போலவே எமது நாட்டில் ஒரு அனர்த்தம் இடம்பெற்றவுடன் சகலரும் ஒன்று திரண்டு செயற்படுவது போன்று இப்போதும் எடுத்துக்காட்டாக நடந்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக இளைஞர்களே அவ்வாறு நடந்துகொள்ள வேண்டும். இதில், சிங்களவர் தமிழர் முஸ்லிம்கள் என்ற பேதமின்றி மக்கள் என்ற வகையில் சகலரும் மனிதாபிமானத்துடன் செயற்பட வேண்டியது அவசி்யமாகும்.

எனது பிரச்சினை தற்போதை தருணத்தில் முக்கியமில்லை. எனவே எதிர்ப்புச் செயற்பாடுளை விடுத்துவிட்டு தற்போதைய நிலைமைக்கு உரிய செயற்பாடு எதுவோ அதனை செய்ய வேண்டும்.

குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்கள் புத்த பெருமான வேண்டிக்கொள்ள வேண்டும். அதனை விடுத்து போலியாக சிருஷ்டிக்கப்பட்ட மற்றைய தெய்வங்களை வணங்கி அவர்களிடத்தில் குறைகளை கூறுவதில் அர்த்தமில்லை.

அதனால் திருட்டு தெய்வங்கள் இல்லாமல் இந்த நாட்டை பாதுகாத்த புத்த மதத்தின் தெய்வங்களிடத்தில் விளக்கேற்றி உங்களின் கவலையை கூறுங்கள். புத்த பூமியை பாதுகாத்து தர வேண்டுங்கள்.

இயற்கை அனர்த்தங்களினாலும் வேறு செயற்பாடுகளினாலும் மாற்றம் பெருகின்ற இந்த மூமியின் பூமியை மீட்டுத் தர வேண்டும் என்று வேண்டுங்கள்.

அதேபோல் புத்தபெருமானின் போதனைகளை கேட்காமலும் அவருக்கு மதிப்பளிக்காமலும் எமது நாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகள் தான் இவ்வாறான இயற்கை அனர்த்தங்கள் நேர்வதற்கு காரணமாகும்.

அதனால் உண்மையான தெய்வத்திடம் பிரார்த்தனை செய்யுங்கள். இதற்கு முன்பு இவ்வாறான அனர்த்தம் ஏற்பட்டதில்லை.

திடீரென அனர்த்தங்கள் நேருகின்றன. இது குறி்த்து புத்த பெருமானும் போதித்துள்ளார்.

ஆட்சியாளர்கள் புத்த மதத்தினை பின்பற்றாமல் இருந்தால் இவ்வாறான செயற்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதனால் இன்று நாட்டில் உள்ள அதர்ம ஆட்சியே அனர்த்தத்திற்கு காரணம் என ஞானசாரர் தெரிவித்துள்ளார்.