நாட்டில் இனவாதம் பேசியவர்களுக்கு இயற்கையின் கோரத்தாண்டவம் ஒரு படிப்பிணையாக அமைந்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
கண்டி சிடி மிஷன் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நாட்டில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
கடந்த காலங்களில் நாட்டில் சிலர் இனத்துவமாக செயற்பட்டு நாட்டில் அசாதாரண சூழ்நிலைகளை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டுவந்தனர். இதனால் மூவின மக்களிடையே அசாதாரண நிலை ஏற்பட்டது.
தற்போதும் அந்த நிலை தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. அவர்களின் பின்னணியில் பலர் செயற்பட்டு வருவதாகவும் தெரிய வருகின்றது.
இவ்வாறான நிலையில் இயற்கையின் கோரத்தாண்டவம் நாட்டை உழுக்கியுள்ள நிலையில், இனவாதம் பேசியவர்களுக்கு இது ஒரு படிப்பிணையாக அமைந்துள்ளது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தம் காரணமாக லட்ச கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ள நிலையில், 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், நாடளாவிய ரீதியில் நிவாரண பனிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த செயற்பாடுகள் அனைத்தும் இன, மத, மொழிக்கு அப்பால் மனித நேயத்துடன் முன்னெடுக்கப்படுகின்றன.
இதில் தமிழ், முஸ்லிம், சிங்களவர் என வேறுபாடுகள் இல்லை. முகாம்களில் அனைத்து இன மக்களும் ஒரே கூரையின் கீழ் எந்தவிதமான வேறுபாடுகளும் இன்றி இருக்கிறனர்.
மீட்பு பணிகளும் இனவாதத்துடன் நடைபெறவில்லை. எல்லோரும் மனிதர்கள் என்றே செயற்பட்டு வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் இனவாதம் பேசிய அனைவருக்கும் இந்த இயற்கையின் கோரத்தாண்டவம் ஒரு படிப்பிணையாக இருக்கும் என நினைக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.