ரஜினிகாந்த் தனிக்கட்சி தான் தொடங்குவார் என தான் கூறியதாக வந்த செய்திகளில் உண்மையில்லை என ரஜினியின் அண்ணன் சத்யநாராயண ராவ் விளக்கமளித்துள்ளார்.
அதன் பின்னர் ரஜினி அரசியலுக்கு வரப்போவது நூறு சதவீதம் உண்மை என அவர் நண்பர் ராஜ் பகதூர் ஊடகங்களில் கூறினார்.
இந்நிலையில், ரஜினியின் அண்ணன் சத்யநாராயண ராவ் ஒரு ஆங்கில சேனலுக்கு பேட்டி கொடுத்ததாக தகவல் வெளியானது.
அதில், புதுக்கட்சி தொடங்குவது குறித்து தனது நெருங்கிய நண்பர்களிடம் ரஜினி ஆலோசனை செய்து முடித்துள்ளார்.
ஜூலை மாதத்துக்குள் அனைத்து மாவட்ட ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்திக்க முடிவெடுத்திருக்கும் ரஜினி, அப்போதே தனது புதிய கட்சியை பற்றி அறிவிப்பார்.
ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்க மட்டுமே வாய்ப்புகள் உள்ளன. அவர் எந்த அரசியல் கட்சியிலும் இணையமாட்டார்
ஊழலை ஒழிப்பதே ரஜினியின் நோக்கமாக இருக்கும். கட்சி கட்டமைப்பு, கொடி, சின்னம் போன்றவற்றை முடிவு செய்யும் வேலை நடக்கிறது என அவர் கூறியதாக தகவல் வெளியாகின.
இந்நிலையில், இதுகுறித்து சத்யநாராயண ராவ் கூறுகையில், ரஜினி தனிக்கட்சி தொடங்குகிறார் என்று நான் கூறவில்லை. யாரோ தவறான செய்தியை பரப்பி வருகின்றனர் என கூறியுள்ளார்.