மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குண்டர்களை ஏவி மிரட்டியதால்தான் கொடநாடு எஸ்டேட்டை மிக குறைந்த விலையில் விற்கும் நிலை ஏற்பட்டதாக அதன் முன்னாள் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
நீலகிரியில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டின் முன்னாள் உரிமையாளர்களில் ஒருவரான பீற்றர் ஜான்ஸ் தற்போது இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பிரித்தானிய தலைநகர் லண்டனை பிறப்பிடமாகக் கொண்ட வில்லியம் ஜான்ஸ் என்பவர் 1975 ஆம் ஆண்டு குறித்த எஸ்டேட்டை விலைக்கு வாங்கியுள்ளார்.
குறித்த தோட்டத்தில் இருந்து 1990 ஆம் ஆண்டு முதற்கொண்டு தேயிலை பயிரடப்பட்டு விற்பனையும், ஏற்றுமதியும் செய்து லாபகரமாக தொழில் செய்து வந்துள்ளனர் வில்லியம் ஜான்ஸ் குடும்பத்தினர்.
ஆனால் 1991 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சர் ஆனதும் கொடநாடு எஸ்டேட் உரிமையாளர்களுக்கு கெட்ட காலம் துவங்கியது. அந்த ஆண்டே ஜெயலலிதாவின் நெருங்கிய சில நபர்கள் மூலமாக எஸ்டேட் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஜெயலலிதா குறித்த எஸ்டேட்டை விரும்புவதாகவும் விலைக்கு கேட்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கொடநாடு தேயிலை தோட்டம் உள்ளிட்ட 906 ஏக்கர் எஸ்டேட்டை விற்க அதன் உரிமையாளர்கள் விரும்பவில்லை. இந்த நிலையில் அவருக்கு திடீர் என்று வங்கிகளில் செலுத்தவிருந்த கடன்பாக்கியை உடனடியாக செலுத்த வலியுறுத்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மட்டுமின்றி ஜெயலலிதாவிற்கு நெருக்கமானவர்களிடம் இருந்து தொடர்ந்து நெருக்கடியும் எழுந்துள்ளது. இதனால் கடும் மனக்குழப்பத்திற்கு உள்ளான வில்லியம் ஜான்ஸ் கொடநாடு தேயிலை தோட்டம் உள்ளிட்ட எஸ்டேட்டை விற்க முன்வந்துள்ளார்.
இதனையடுத்து தொடர்ந்து 2 ஆண்டுகள் விலை பேரம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளது. இதில் 6 முறை ஜெயலலிதா, சசிகலா இருவரும் நேரில் சென்று வில்லியம் ஜான்சை சந்தித்து பேசியுள்ளனர்.
இதன் முடிவில் 1994 ஆம் ஆண்டு 906 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட கொடநாடு எஸ்டேட்டை வெறும் ரூ.7.6 கோடிக்கு ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் கைப்பற்றியுள்ளனர்.
பேச்சுவார்த்தை நடைபெற்ற 2 ஆண்டு காலத்தில் பலமுறை குண்டர்கள் வாகனங்களில் சென்று வில்லியம் குடும்பத்தினரை மிரட்டியும் தகாத வார்த்தைகளால் திட்டியும் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
இதில் சசிகலா மற்றும் தற்போதைய தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோரது அடியாட்களே தங்களை மிரட்டி பணிய வைத்துள்ளதாக வில்லியம் ஜான்சின் மகன் பீற்றர் வில்லியம் ஜான்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.