திமுக தலைவர் கருணாநிதிக்கு இருக்கும் அனுபவ முதிர்ச்சி ஸ்டாலினிடம் இல்லை என்றும், இருந்திருந்தால், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் திமுக ஆட்சியில் இருந்திருக்கும் என அந்த கட்சியின் மூத்த உறுப்பினர்கள் புலம்புவதாக கூறப்படுகிறது.
திமுகவின் சார்பில் கருணாநிதியின் வைர விழா, அவரது பிறந்த நாளான ஜூன் 3 ஆம் திகதி கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்திய அரசியலில் தற்போதுள்ள மூத்த தலைவர் கருணாநிதி ஒருவரே. அதனால், இந்த வைரவிழாவை பிரம்மாண்டமாக கொண்டாட திமுக சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மட்டுமின்றி பாஜக, அதிமுகவை தவிர நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான கட்சி தலைவர்களும், மாநில முதல்வர்கள் பலரும் இந்த விழாவில் பங்கேற்கின்றனர்.
ஆனால், கருணாநிதியின் வைர விழாவை மகிழ்ச்சியாக கொண்டாட முடியாத வகையில், முக்கிய திமுக புள்ளிகள் சிலரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடத்தப்படலாம் என்ற தகவல் கசிந்துள்ளதால்,
என்ன இடையூறு ஏற்பட்டாலும், திமுக சார்பில் திட்டமிட்டபடி விழா சிறப்பாக நடக்கும் என்று, திமுக மூத்த நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.
அதே சமயம், கலைஞருக்கு உள்ள அனுபவ முதிர்ச்சி ஸ்டாலினிடம் இல்லை என்றும் அவர்கள் குறை கூறுகின்றனர்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் பன்னீர்செல்வம் முதல்வர் பதவியில் இருந்து விலகும் நேரத்தில் 30 க்கும் மேற்பட்ட அதிமுக எம்.எல்.ஏ க்கள் திமுகவுக்கு ஆதரவு அளிக்க முன்வந்தனர்.
அவர்கள், ஸ்டாலினிடம் 5 அமைச்சர் பதவிகளும் ஒரு சில வாரிய பதவிகள் மட்டுமே கேட்டனர். ஆனால், ஸ்டாலின் அமைச்சர் பதவி தர மறுத்ததன் காரணமாகவே அவர்கள் தங்கள் முடிவை கைவிட்டு அதிமுகவிலேயே இருந்து விட்டனர்.
அவர்களின் கோரிக்கையை ஸ்டாலின் அப்போது ஏற்றிருந்தால், திமுக ஆட்சியில் அமர்ந்து அவர் முதல்வர் ஆகி இருப்பார். கருணாநிதியின் வைர விழாவும், அரசு விழா போல், வெகு விமர்சையாக நடந்திருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இனி, அதுபோல இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்குமா என்றும் திமுக மூத்த நிர்வாகிகள் புலம்புவதாக தெரிய வந்துள்ளது.