நேபாளத்தின் உள்நாட்டு விமான நிறுவனமான கோமா ஏர் நிறுவனத்தின் சரக்கு விமானம், எவரெஸ்ட் பிராந்தியத்தில் உள்ள டென்சிங் ஹிலாரி விமான நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்றது. டென்சிங் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு ஆயத்தமானபோது, திடீரென விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையை நோக்கி வேகமாக பாய்ந்து வந்து தரையில் மோதியது.
இதில் விமானம் பலத்த சேதம் அடைந்தது. இதையடுத்து ராணுவம், போலீஸ் மற்றும் உள்ளூர் மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இவ்விபத்தில் சீனியர் பைலட் பரஸ் குமார் ராய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். துணை விமானி மனாதர், விமான பணிப்பெண் மகார்ஜன் ஆகியோர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தரையிறங்கும்போது பனிமூட்டம் அதிகமாக இருந்ததால், விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.